Tuesday, May 26, 2026

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா,

அப்பச்சிக்குச் செல்லம்மா,

அன்பு வைத்து வளர்த்தவளை

ஆயிரம் பேர் சொல்லம்மா!


ஐயா கைப்பிடித்துப் போனால்

அந்தி நேரம் பொன்னாகும்,

அவள் நடந்த நெடுந்தெருவே

அல்லி பூத்து நின்றாகும்!


வத்தல் வைத்து வடகம் செய்து

வாசம் வீசும் வீடம்மா,

தேங்குழலும் மாவுருண்டை

தேவர் உண்ணும் நேயம்மா!


சீப்பு சீடை சுட்டுக் கொண்டு

சின்னச் சின்ன சிரிப்பம்மா,

பலகாரம் பரிமாறும்

பாசக் கையின் பெருமம்மா!


மோரில் நீர் கலக்க மாட்டாள்,

மொழியிலே பொய் புகட்ட மாட்டாள்,

தண்ணீர் சேராத பாலைப் போல

தங்க மனசு கொண்டாளம்மா!


காய்கறிகள் சந்தை போக,

காசு மட்டும் கைக்கு வரும்,

மனக்கணக்குப் போட்டுப் பார்த்தால்

மந்திரிக்கும் மயக்கம் வரும்!


ஆயா சொல்லும் கைவேலை

அழகாகக் கற்றாளம்மா,

பின்னல் ஏழு, கூடை நூறு

பிடித்த கையில் பிறந்தம்மா!


நெல் அவித்து, உரல் குத்தி

நிறை நாழி சோறு பொங்க,

உழைத்த கைக்கு ஓய்வில்லை

உயிரே போலும் வேலையம்மா!


சுட்ட கோழி சுக்கா ஆனால்

சுவையும் சேர்ந்து ஆடுமே,

மண்டி, பச்சடி வைத்தால் கூட

மணக்கும் வீடு பாடுமே!


“இந்தா மாங்காய்… முருங்கைக்காய்…

இன்னும் நாலு வாழைக்காய்…

விளைந்த நார்த்தங்காய் எடுத்துப் போ…”

வீதி முழுக்க வாழ்த்தம்மா!


எதிர்த்த வீட்டு பெரிய ஆச்சி

எடுத்துக் கொடுத்து மகிழ்வாளே,

இரவல் கேட்ட கை காலியெனில்

இரக்கத்தாலே நிரப்புவாளே!


செட்டி நாட்டுத் தங்கப் பெண்கள்

சேர்த்து வாழ்ந்த செல்வம்மா,

சிறுவாடு சேர்த்து வைத்து

சிறப்பாய் வாழ்ந்த சீரம்மா!


வட்டி காசு வந்த போதும்

வம்புச் செலவு செய்ய மாட்டாள்,

பிள்ளை, பேரன் நாளைக்கென்று

பிடிவாதமாய் சேர்ப்பாளம்மா!


காஞ்சிபுரம் கண்டாங்கிச் சேலை

கம்பீரமாய் கட்டுவாளே,

வைர மூக்குத்தி மின்னும் போது

வான நிலவும் வெட்கப்படுமே!


ஏழு கல்லுத் தோடு மின்ன

எட்டுத் திக்கும் ஒளி விழுமே,

வைரத் தாலி நெஞ்சில் தொங்க

வைகை நதியும் நின்று பார்க்கும்!


அள்ளி முடித்த கொண்டையிலே

அரைக்காசு மல்லி போதும்,

பிச்சிப் பூவும் கனகாம்பரமும்

பின்னால் வந்து காத்திருக்கும்!


“நூறு பூவை எண்ணிப் போடு!”

நொடியிலே கணக்குப் போடுவாள்,

கைமாற்றுக்கு வட்டி வாங்கும்

கணக்கறிவின் கருவம்மா!


ஆச்சி முகம் பார்த்தவுடன்

அடையாளம் சொல்லும் ஊரம்மா,

நாட்டுக்கோட்டை நகரத்தாரின்

நடமாடும் நிதியம்மா!


வெட்டத் தெரியும், கட்டத் தெரியும்,

விட்டதை மீண்டும் சேர்க்கத் தெரியும்,

செட்டியார்க்கு ஆலோசனை சொல்லும்

சேர்ந்த ஞானச் செல்வம்மா!


பசி கொண்டு வாசல் வந்தால்

“பந்தம் என்ன?” கேட்க மாட்டாள்,

பாத்திரம் நிறைய சோறு வைத்து

பாசத்தோடு அனுப்புவாளே!


ஆற்றில் போட்டாலும் அளந்து போடும்

அற்புதமான ஆச்சிமார்கள்,

ஆனால் அன்பை அள்ளிக் கொடுக்கும்

அமுத மனசுக் காரம்மா!


தேர்தல் இல்லா தலைவர்களாம்

தெருவெங்கும் வாழ்ந்த பெண்கள்,

செட்டியாரின் சுவாசமெல்லாம்

சேமித்து வைத்த தேவியர்கள்!


அன்பு கொடுத்து பாருங்கள்,

அள்ளிப் பணமும் கொடுத்து பாருங்கள்,

ஆச்சி கைக்கு சென்றதெல்லாம்

ஆயிரமாய் பெருகி வரும்!


No comments:

When Apple Copies, It Is Called Patience

The West has spent decades calling Asian companies copycats. Watch how the story changes when Apple arrives late. When Apple introduced the ...