Saturday, July 11, 2026

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களால் பல தலைமுறைகளின் நினைவுகளோடு கலந்திருந்த அந்தக் குரல் இன்று மௌனமானது.




மெலடி மட்டும் மிச்சம்,

குரல் இல்லை.


நினைவுகள் மட்டும் மிச்சம்,

நீ இல்லை.


இன்று

வானொலியில் ஒலிப்பது

ஒரு பாடல் அல்ல…


ஒரு காலம்.


பாலுவுடன் சேர்ந்து பாட

பரலோகம் புறப்பட்டு விட்டாயோ?


போ அம்மா…

போய் வா.


அங்கே

மௌனமாய் காத்திருக்கும் மேகங்களுக்கு

மீண்டும் உயிர் கொடு.


இங்கே

எங்கள் கண்ணீருக்கு

இசை கொடுத்ததுபோல்.


இன்று

உன் பழைய பாட்டு ஒலிக்கும் போது,


யாரோ ஒருவன்

கண்ணீரை மறைத்துக் கொண்டு,


"இன்னும் ஒரு தடவை…


ஒரே ஒரு தடவை…


பாடம்மா…"


என்று

தன் மனதுக்குள் கேட்பான்.


இருபது மொழிகள் கடந்து

இதயங்களைத் தொட்ட உன் ஸ்வரம்,


இன்று

ஒரே ஒரு மொழி மட்டும் பேசுகிறது—


பிரிவு.


ஆனால்

அது கூட முழு உண்மை இல்லை.


ஏனென்றால்,


குரல்கள் மரணமடைவதில்லை.


அவை

தாயின் தாலாட்டாகவும்,


முதல் காதலின்

முத்தாய்ப்பாகவும்


தனிமையின் 

தோழியாகவும்,


வாழ்க்கையின் 

பின்னணி இசையாகவும்


மனிதர்களுக்குள்

மறுபிறவி எடுக்கின்றன.


அதனால்,


நீ இல்லையென்று

யார் சொன்னது?


ஒவ்வொரு முறையும்

யாராவது

உன் பாடலைக் கேட்டு

கண்களை மூடும்போது,


அந்த நொடியிலே—


ஜானகி அம்மா,

நீ மீண்டும் பிறக்கிறாய்.


மெலடி மட்டும் மிச்சம் 

என்று நினைத்தோம்.


இல்லை. 


அந்த

மெலடியாகவே நீ

மின்னுகிறாய்.


No comments:

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...