Friday, March 16, 2018

லெட்சுமி வந்தாள்


"டேய் பசங்களா! நேரம் ஆறது! சீக்கிரம் வாங்கோ! அலங்காரம் முடிச்சு பூஜை பண்ணணும்!" என் பாட்டியின் குரல் வீட்டின் கொல்லயிலிருந்து சன்னமாய்க் கேட்டது. அய்யனார் குளத்தில் அமளி செய்து கொண்டிருந்த பேரன், பேத்தி நாங்கள் விழுந்தடித்துக்கொண்டு கரையேறினோம்.

இன்றய இனிய காலைப் பொழுதில் மாட்டுப்பொங்கல் கொண்டாட கிராமமே தயாராகிக் கொண்டிருந்தது. ஒற்றை மாட்டு, இரட்டை மாட்டு வண்டிகளுக்கும் பூஜை! மற்றவர்கள் ஆர்பரித்துக்கொண்டிருக்க , மெதுவாக நழுவி நான் கொல்லைப் பக்கம் போனேன். அசந்தும் போனேன்.

மாட்டுத் தொழுவம் முழுவதும் நீராடல் கண்டிருந்தது. வைக்கோல் எல்லாம் அகற்றப்பட்டு புது வீடு போல காட்சி அளித்தது. பசுக்கள் எல்லாம் குளிப்பட்டப்பட்டு தயாராக நின்றன. "டேய்! வந்து கொஞ்சம் ஒத்தாச பண்ணு!" பாட்டி.

நகரத்தில் வளர்ந்து, பொங்கலுக்குப் பாட்டி வீடு வந்திருந்த  எனக்கோ தரையில் கால் படவில்லை. குழவிக்குப் போட்டியாக குதித்தோடினேன். கன்றுகளை நான் கவனிக்க, பசுக்களைப் பாட்டி பார்த்துக்கொண்டாள். கொம்புகளுக்கு நடுவே மெட்டி மாலைகள். நடு நெற்றியில் சந்தன குங்குமம். கழுத்தில் எருக்கம் மாலை. கால் குவளத்தில் சலங்கை. " ஜல்!ஜல்!" என பசுக்கள் நடை பயின்றன. இவை மாடுகளா? இல்லை மணப்பெண்களா?

பாட்டியின் இரக்க குணம் கிராமமே அறிந்த ஒன்று. சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிகம் பற்று உடயவள். எனினும், புயல் காலத்தில் ஜாதி மதம் பாராது முழு வீட்டையே புகலிடமாகப் புழங்க விட்டவள். அக்ரஹாரத்தில் எல்லோருக்கும் அவளிடம் மரியாதை கலந்த நட்பு. குடியானவர்களுக்கோ அவள் ஒரு தாய். அவ்வளவு ஏன். கொட்டிலில் இருக்கும் பசுக்களும் அவள் சொன்ன பேச்சை மீரா. அவளுக்கு வீட்டிலும் பிள்ளைகள். கொட்டிலிலும் பிள்ளைகள். என்ன ஆனாலும் சரி, கொட்டிலிலிருக்கும் தன் குழந்தைகளை பரிவுக்குப் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்பவள்.

போன வருடம் மழை பொய்த்து இருந்தது. மதகுகளில் நீர் வரத்து இல்லை. மகசூல் மிகவும் கம்மி. வேளாண்மைக்கு வாங்கிய கடன் பொதியாய் கனக்க, வேறு வழியில்லாமல் சிகாரில் உள்ள "கடை" சாயபுவை வரவழித்து, கனத்த இதயத்துடன் "லெட்சுமி" யை விற்று இருந்தாள். ( கொட்டிலில் இருக்கும் பசுக்களில் மூன்றில் ஒன்றிற்காவது "லெட்சுமி" என்பது பெயராக இருக்கும்!). மாட்டுப்பெண் போக, மாட்டையே பெண்ணாக பாவித்த தலைமுறை அது!

***********************************************

ஆக்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைக்குப் புறப்பட்டன. பூஜைக்குப்பின் பசும்புல்லும், கரும்பும்  நாட்டு வாழைப்பழமும் விருந்தாக்கப்படும் என்பது அவைகளுக்குத் தெரியும். பாட்டியோ மந்திரங்களில் மூழ்கியிருக்க, பேரன் பேத்திகள் நாங்கள் ஆர்வத்துடன் பார்த்திருக்க,


".........ம்ம்ம்ம்ம்ம்மமா" 


பாட்டியின் கண்களில் ஒரு மின்னல். பின்னே,  தாய்க்குத் தெரியாதா, குழந்தையின் குரல்? கொல்லையின் கடைசியில், வைக்கோல் போருக்குப் பக்கத்தில் -  லெட்சுமி!!

ஆம் ! பிரிந்த தாயைப் பார்க்க, மாட்டுப்பொங்கல் விருந்துண்ண வந்து குரல்
கொடுக்கும் லெட்சுமி! பாட்டியின் நடையில் ஒரு தவிப்பு. பக்கத்தில் போனாள்.
லெட்சுமியின் கண்களில் மிளிர்ச்சி. அந்த அழகிய கண்கள் பாட்டிக்கு பல அர்த்தங்கள் புகட்டின.

" என்னை விற்க உனக்கு எப்படி மனம் வந்தது?"

" என்னை விட்டுவிட்டு மாட்டுப்பொங்கலா?"

"இங்கே பார், யாரென்று!"

லட்சுமியின் பக்கத்தில் சுமார் 3 மாதக் கன்று !! என் பாட்டியைக் காண தாயும் மகளும் 3 கி.மீ. கடந்து வந்துள்ளனர்! பதி-பசு-பாசம் எனும் சித்தாந்தத்திற்கு சாட்சியாய் !

புரியாப் பருவம் பிள்ளைகள் எங்களுக்கு.
பனித்த கண்கள், பாட்டிக்கு. பிறகென்ன?
இனித்த விருந்து கொட்டில் குழந்தைகளுக்கு.



( இது உண்மைச்சம்பவம். சுமார் 40 ஆண்டுகள் முன்னர் நடந்தது. என் சித்தி சொல்லக்கேட்டு கதையாக்கம் செய்துள்ளேன் ). 

Sticking with you

I am sticking with you, honey You make my whole wide world sunny When shadows creep and hopes feel few, My heart finds its brave light in yo...