Tuesday, May 8, 2018

தாயன்பு

இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. தனி ஒருவனாய் நின்று, பாரிசவாயுவினால் பாதிக்கப்பட்டுள்ள என் தாயை, புவியின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் கொண்டு வர நான் பட்ட பாடு இருக்கிறதே! அதைச் சொல்ல தனியாக ஒரு கட்டுரை தேவை. இப்போது நினைத்தாலும் மலைப்பாகத்தான் இருக்கிறது. அடு கிடக்கட்டும். பிரிதொரு முறை பகிர்கின்றேன்.

Jet lag போகவே பத்து நாட்கள் ஆயின, அம்மாவிற்கு. தவிர, கடுங்குளிரிருந்து கடும் வெய்யிலுக்குப் பழகுவதற்கு எண்பதை எட்டியுள்ள அவள் உடல் மிகவும் கஷ்டப்பட்டது. ஒரு வழியாக அவள் இங்கு இருக்கக் கற்றுள்ளாள்.

படுத்த படுக்கையாய் உள்ள அவளுக்கு அமெரிக்காவில் அந்தக் குளிரில் வெளி உலகைக் காண வழியே இல்லை, பாவம். அதனால் , வந்த முதல் நாளே முடிவெடுத்தேன்- தினமும் அவளை சக்கர நாற்காலியில் அமர்த்தி ஒரு அரை மணி நேரமாவது வானையும் வீதியையும் கண்ணபிக்க வேண்டும் என. அம்மாவும் முதல் நாள் சம்மதித்தாள்.

விமரிசையாக அவளை வீதியுலா செய்வித்து மகிழ்ந்தேன். கண்பார்வை போய் பல வருடங்கள் ஆயினும், ஒரு சிறுபிள்ளைக்குரிய குதூகலத்துடன் ரசித்துக்கொண்டே வந்தாள்! பூங்காவில் செம்பருத்தியும் நந்தியாவட்டையும் அவள் மூக்கிற்கும் மனதிற்கும் நிறைவைத் தந்தன.

பின் இரண்டாம் நாள் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாள். சரி, ஏதோ களைப்பு போல, நாளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

ஆனால் மறுநாளும். அதே கதை. அதே மறுப்பு. சுகவீனம் உள்ளதோ எனச் சந்தேகித்தேன். அனால் அவள் " அதல்லாம் ஒண்ணும் இல்லடா! டயர்டா இருக்கு. இன்னொரு நாள் போகலாம்" என்று சொல்லி விட்டாள்.

எனக்கோ ஒன்றும் புரியவில்லை. உடம்பு சரியாகத்தான் இருக்கிறது என்கிறாள். ஆனால், வெளியில் இட்டுச்செல்ல இடம் கொடுக்கவில்லை.
இது என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதே என எண்ண அலைகளின் தாக்கம்.

காலமான என் தந்தைக்கு முன்கோபம் அதிகம். தாயோ சாந்தத்தின் சின்னம். ஆனால் என்னவோ தெரியவில்லை. இங்கு வந்ததிலிருந்து தாய் தந்தையாக மாறியுள்ளாளோ எனச் சந்தேகம். சிறு பிள்ளை போல கோப தாபம் எல்லாம் மிகையாகத் தெரிந்தது. பேச்சில் கோர்வைக்  குறைந்துள்ளதை உணர்ந்தேன். பல சமயங்களில் அவளுக்கு ஒன்றுமே புரிவதில்லையோ என ஒரு பிரமை எனக்கு. பத்து நாட்கள் ஆகியும் வெளியில் போக மறுத்துக்கொண்டே வந்தாள்.

இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு, அலுவலத்திலிருந்து வீடு வந்தடைந்தேன்.

"அம்மா, வா! ஒன்ன வெளில கூட்டிண்டு போறேன். சேர்ல ஒக்காரு. நான் ஒத்தாச பண்றேன்!"

உடம்பே சரியில்லாததொரு பாவனை முகத்தில். " வேண்டாண்டா! இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நாளைக்கு பாக்கலாம்!"

" கொழந்த மாதிரி படுத்தாதே அம்மா! ஆத்துக்குள்ளயே அடஞ்சு கெடக்கற , நாள் பூரா. வெளில போனா காத்தாட இருந்துட்டு வரலாம், வா!"

" சொன்னா கேளுடா! நான் இப்படியே இருக்கேன். விடு!" அழாத குறையாக அவள் முணுமுணுத்தாள்.

"ஏம்மா, தெனமும் இதையே சொல்றயே! உடம்புக்கு முடியலையா? இல்ல உன் பெரிய புள்ள கிட்ட இருந்து பிரிச்சு இங்க கொண்டுவந்துட்டேன்ன்னு என் மேல கோவமா?"

" அதல்லாம் ஒண்ணும் இல்லடா. வேண்டாம்னா விடேன். என்ன எதுக்கு இப்போ கட்டி இழுக்கற?"

"நான் ஒன்ன சரியா பாத்துக்கலைன்னு வருத்தம்மா அம்மா? ஏதாவது குறை வெச்சுட்டேனா? சொல்லும்மா! என் டெய்லி வேண்டாம்கற? ஒனக்கு இங்க கம்பெர்டபிளா இல்லியா? சரிம்மா. சொல்லு, என்னாச்சு?"

பார்வை இல்லா அந்தக் கண்களின் ஓரத்தில் பனி. தளர்ந்த கைகளால் என்னை பக்கத்தில் அழைத்தாள்.

" டேய் கண்ணா! என் கண் பார்வை போயி நெறையா வருஷம் ஆச்சு. அதனால எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனக்காத! ஒண்ணுக்கும் ப்ரயோஜனம் இல்லாத இந்தக் கெழவிக்காக நீ எவ்வளவு ஸ்ரமப் பட வேண்டியிருக்குன்னு எனக்கு நன்னா தெரியும். எவ்வளவு பெரிய வியாதிலேர்ந்து அவஸ்தை பட்டு மீண்டு வந்து இருக்க நீ! அதையும் மீறி எனக்காக இவ்வளவும் செய்யற!  ஆபீஸ்லேர்ந்து டயர்டா வேற வந்து இருப்ப. ஒன்ன மேலும் ஸ்ரமப் படுத்த இஷ்டம் இல்லடா. அதுனாலதான் வேண்டாங்கறேன்! காபி குடிச்சுட்டு ரெஸ்ட் எடு!"

விக்கித்துப் போனேன். ஆண்டவா! அம்மாவுக்கு என் சேவை தேவை என்பதற்காகத்தான் புற்று நோயிலிருந்து எனை வெளிக்கொணர்ந்தாயோ?
இந்த ஈடு இணையிலா தாயன்பு கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

அவளின் சக்கர நாற்காலி மெல்ல நகர்கிறது. என் மனமோ முட்டிக்கு வந்தடைந்துவிட்ட தேர் போல நகர மறுக்கிறது! 











   







       

Sticking with you

I am sticking with you, honey You make my whole wide world sunny When shadows creep and hopes feel few, My heart finds its brave light in yo...