Sunday, October 11, 2020

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

 எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

====================


சனிக்கிழமை . இரவு ஏழரை. "என்ன சமையல், ரோவன்?" கேட்டுக்கொண்டே சமயலறையில் நுழைந்தேன்.

சொன்னாள். 


அடுப்பில் தளிகை. மூக்கில் வாசம். வாயில் ஜொள்ளு.

ஆயிற்று. இரண்டரை வருடங்களாய் ரோவன் பிலிப்பீன்ஸ் நாட்டில் தன் 4 சிறு குழந்தைகளை தன் உதவாக்கறைக் கணவனிடம் ஒப்படைத்து விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக இங்கு சிங்கையில் என் வீட்டில் பணிப்பெண்ணாக வந்து. 


அவளைப்பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. அவைளைப் பற்றி கண்ணதாசன் அன்றே பாடி வைத்துப் போய்விட்டான்.


"எங்கிருந்தோ வந்தான் 

இடைச்சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்.


சொன்னபடி கேட்பான்

துணிமணிகள் காத்திடுவான்

சின்ன குழந்தைக்கு

சிங்காரப் பாட்டிசைப்பான்


கண்ணை இமையிரண்டும்

காப்பது போல்

என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்

வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்


பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன்

கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்

பேசி முடியாது நண்பனாய் மந்திரியாய்

நல்லாசிரியனுமாய்


யதா யதா ஹி தர்மஸ்ய

க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானமதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்


பண்பிலே தெய்வமாய்

பார்வையிலே சேவகனாய் ரங்கன்

எங்கிருந்தோ வந்தான்

ரங்கன் ரங்கன்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன் ரங்கன்."


"படிக்காத மேதை " யில் சிவாஜி எனக்காகவே முணுமுணுத்த வரிகள். பக்க வாதத்தில் பாதிக்கப்பட்டு, பார்வையும் பேரிழந்து, பரிதவிக்கும் அம்மாவுக்கு அந்தக் கண்ணனே கைங்கர்யம் செய்கிறான், ரோவன் ரூபத்தில். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.


சமயலறைக்குத் இப்போது திரும்புவோம்.


அவளைப் பார்த்தேன். அடுப்பை அளந்தேன். பக்கத்தில் - அவள் மொபைல் . ஸ்கைப்பில் அவள் கடைக்குட்டி. வயது 4. அறியாப் பருவம். அம்மாவுடன் களிக்கிறாள். அவளுக்கு கூட பணம் தேவை என ஓரளவு புரிந்து இருக்கக் கூடும். ஆனாலும் " நீ இங்கு இல்லாமல் நான் எவ்வளவு வாடுகிறேன், புரியலையா அம்மா?" எனக் கேட்கும்  கண்கள்.


ஸ்க்ரீன் முன் நான் போனேன். "ஹல்லோ! ஹவ் ஆர் யூ ?" புன்னகைத்தேன்.


ஒரு கணம் தயங்கினாள். பின், மழலையில் " ஐ ஆம் fine ! ஹவ் ஆர் யூ ?"


ஆடிப் போய் விட்டேன், ஒரு கணம். அவளின் அந்தக் குழந்தைப் பார்வை. ஆனால் அது என்னவோ என்னைப்பார்த்து , " ஓ! பணம் என்ற பெயரில் என் அம்மைவை என்னிடம்  இருந்து பிரித்த கயவன் நீதானா?"


மேலும் " இங்கே எங்களைப் பட்டினியில் போட்டு விட்டு, உனக்கு என் அம்மா கையால் அறுசுவை உணவா?"


பால முருகன் அவ்வையைப் பார்த்து "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என ஸ்கைப்பில் கேட்டான்!


"என்னை நகரச் சொல்கிறாயே! என் உடம்பைச் சொல்கிறயா? என் ஆத்மாவைச் சொல்கிறாயா?" எனச் சண்டாளன் ஸ்கைப்பில் சூளுரைதான். அதன்பின் "மனீஷா பஞ்சகம்" பாட நான் என்ன ஆதி சங்கரரா?


எனக்கு இரவு உணவு இறங்கவில்லை. இதுவரை செய்த பாவங்கள் எல்லாம் போதாமல், இந்தப் பாவமும் இப்போது என் கணக்கில் வருமே? கிருஷ்ணா!


ஒரு டம்பளர் தண்ணீர் குடித்தேன். எல்லோரும் உறங்கி ஆயிற்று. மெதுவாக ஹாலுக்கு வந்தேன். 

மங்கிய ஒளியில், என் மகள் வரைந்த நீலமேகக் கண்ணணின் படம். பெரிதாக சுவற்றில் சிரித்தான்.


"எங்கிருந்தோ வந்தான் 

இடைச்சாதி நான் என்றான்....." 


என்னைப் பார்த்து கண் சிமிட்டினான்.  "அடேய் மடையா! சிங்கப்பூர் வரத்தெரிந்த எனக்கு என்ன பிலிப்பீன்ஸ் போகத் தெரியாதா?"

Sticking with you

I am sticking with you, honey You make my whole wide world sunny When shadows creep and hopes feel few, My heart finds its brave light in yo...