Sunday, October 19, 2025

கடலுக்கு அப்பால்

கடல் தான் அவளின் உலகம்.

கடலுக்கப்பால் - அவன்.

ஒவ்வொரு காலையும் அவள் கடற்கரைக்கு வந்தாள்.

மணலில் பாதம் மூழ்கியபடி, வானத்தை பார்த்தாள் —

எங்காவது ஒரு நிழல் தோன்றுமா என்று.

கைகளில் ஒரு பழைய கடிதம்.

எழுத்துக்கள் மங்கியிருந்தாலும், அவள் மனதில் தெளிவாகவே:

“கடலுக்கு அப்பால் நான்... இக்கடிதம் உன் வசம் வரும்போது

நான் இன்னும் உயிரோடிருப்பேனா?  தெரியாது.


ஆனால் ஒவ்வொரு அலைக்கும் உன் நெஞ்சின் துடிப்பு போல ஒலி உண்டு.”


மூச்சு போனாலும் நினைவு போகாது,

மணல் கூட காத்திருக்கும் — அவன் காலடிக்கு.

================================================


அவன்.  அவளின் வாழ்வு முழுக்க நிறைத்தவன்.

காலை வேளையில் புன்னகை, இரவு வேளையில் கனவு. இருவரும் கனவு கந்தர்வ கோட்டையில் கூட்டு வாசம். அவனே அவள் அகிலம் ஆனான். 


அப்படி இருந்த நாளில், திடீரென்று கதவு தட்டல். ஆங்கிலப் படையினர்.

"துரோகி" என்று சொல்லி இழுத்துச் சென்றார்கள்.


அவளுக்குத் தெரிந்தது ஒன்றே — அவன் தன் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடினான்.

கத்தினாள். கதறினாள். 


“எங்கு கொண்டு போகிறீர்கள் அவனை?’

அவர்கள் சொன்னார்கள் — “காலா பானி.” 


==================================

காலா பானி — கடலின் நடுவே ஒரு நரகம்

அந்தமான் கடலின் மையத்தில் கட்டப்பட்ட சிறை.

சுற்றிலும் கடல், நடுவில் கல் கோட்டை.

ஒவ்வொரு கைதிக்கும் தனி அறை.

ஒளி வர ஒரு சிறிய சிறு ஜன்னல் மட்டும்.

உயிர் குரல்கள் கடலில் கரைந்துபோகும்.

அங்கிருந்து யாரும் திரும்பியதில்லை.

அங்கே அவனை அடைத்தார்கள்.

எண்ணெய்-கல்லைத் திருப்பும் தண்டனைச் செக்குச் சக்கரம்.

சூரியன் எழுந்தது முதல் மறையும் வரை — வலி, வியர்வை, மௌனம். 

வலி. புண். சீழ். நோய். காய்ச்சல். 

வேதனை. வலி. மரண வலி. 


வெள்ளையனின் ஒவ்வொரு அடியும் நினைவுகளை அழிக்க முயன்றது. ஆனால் நினைவு மரிக்கவில்லை.

அந்த இருள் அறையிலும் அவனுக்கு தோன்றியது — அவள் முகம்.

அவன் மெல்ல சொன்னான்,

“காத்திரு... ஒருநாள் நான் திரும்புவேன்.”

மாதங்கள் வருடங்களாகின.


அவள் வாழ்க்கை பொறுமையும் வெறுமையுமாய் மாறியது.


ஒவ்வொரு காலையும் தீபம் ஏற்றி அவனின் புகைப்படத்தை நோக்கி மௌனமாய் நின்றாள். அவளின் பிரார்த்தனை — அவன் பெயர் மட்டும்.

தபால்காரன் கதவு கடக்கும் ஒலி — மூச்சு நின்றுவிடும். அந்த நாளில் ஒரு கடிதம் வந்தால், அவள் உயிரே வந்தது போல இருக்கும். வந்தது ஒரு கடிதம், அன்று.

“இங்கு இரவு இருளல்ல… அது மரணத்துக்காக காத்திருப்பு.

ஆனால் உன்னை நினைத்தால் — காற்றில் உன் வாசனை.”

அந்த வரிகளை அவள் வாசித்தாள்.

கண்ணீர் காகிதத்தைக் கரைத்தது.

அதை மெல்ல மடித்து உதட்டில் தொட்டாள்.

“வாழ்ந்திரு... நான் காத்திருக்கிறேன்,” என்றாள்.

அந்தமான் சிறையில் அவன் உடல் சுருங்கியிருந்தது.ஆனால் மனம் நிமிர்ந்திருந்தது. சுவற்றில் கரியால் எழுதியான் – அவள் பெயரை . பல முறை. 


“நான் திரும்பவில்லை என்றால் கோபப்படாதே.

என் இதயம் துடிக்கிறது — நான் காணாத சுதந்திரத்திற்காகவும் உனக்காகவுமே!.”

காய்ச்சலுடன் கிடந்தபோதும், அவன் நம்பிக்கை ஒன்றே அவனுக்கு மருந்து. “அவள் இன்னும் காத்திருக்கிறாள். போக வேண்டும் – சீக்கிரமே!”

அந்த இரவு - அவள் திடீரென்று விழித்தாள். மூச்சு முட்டியது. நெஞில் இனம் புரியாத ஒரு கனம். எழுந்து கடற்கரைக்கு ஓடினாள். அலைகள் கொந்தளித்தன. 


அவள் கத்தினாள்,

“அவன் உயிரோடுதான் இருக்கின்றானா? ஒரு சமிக்யையாவது கொடு!”

கடல் கரைந்தது. சத்தமாக அலறி திடீரென்று அமைதியானது போலிருந்தது.


கடல் சொன்னது — ‘அவன் வருவான்’,

அவள் சொன்னாள் — ‘நான் காத்திருப்பேன்.’


வருடங்கள் கடந்தது. கடிதங்கள் வரத்து நின்றது. மக்கள் மெதுவாக மறந்து விட்டார்கள்.


அவள் மட்டும் இன்னும் கடற்கரைக்கு வந்தாள்.

கடலின் வெள்ளை நுரை – அவள் கூந்தலில் குடியேறி இருந்தது.

ஆனால் வாடிய கண்கள் இன்னும் அதே வருடலில். தேம்பிய நெஞ்சம் தேடலில் தஞ்சம். 

சில நேரங்களில் அவள் தனக்குள் நகைத்தாள்.


“அவன் இன்னும் இங்கேயே இருக்கிறான் போல.

அலை ஒலி... காற்றின் தழுவல்... அவனின் மூச்சு போல.”

ஒரு மாலை, ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

“மாமி! கடற்கரையில் இதைக் கண்டெடுத்தேன்!”

அவன் கையில் ஒரு இரும்புப் பெட்டி. உள்ளே, உப்பு நீரால் மங்கிய காகிதம். அதில் மங்கிய எழுத்துக்கள்:

“கடலுக்கு அப்பாலும், உன்னையே நினைத்தேன்.”

அவள் கைகள் நடுங்கின.

அது அவனிடமிருந்து தானா?

அல்லது வேறொருவர் தன் காதலிக்காக எழுதியதா?

தெரியாது.

ஆனால் அவள் இதயத்தில் முழு நம்பிக்கை —அது அவன்தான். கண்டிப்பாக.


அலை கடந்து அவன் பெயர் வந்தது,

அழுத மனம் நின்று போனது.


அவள் கடலை நோக்கிப் பார்த்தாள். சூரியன் தங்கமாக கரைந்தான்.

“நீ வந்துட்டியா?…” என்று அவள் கிசுகிசுத்தாள்.

“கடலோடே, காற்றோடே… நீ வந்துட்டே. வா! வா!”

அலை ஒன்று வந்து அவள் காலில் முத்தமிட்டது.

அந்த இரவு தீபம் வழக்கத்தை விட பிரகாசமாக எரிந்தது.


அடுத்த நாள் காலை.

“அக்கா!” பக்கத்து வீட்டு பார்வதி. உள்ளே வந்தாள். பார்த்தாள்.

இவள் இருக்கை காலியாக இருந்தது.அவன் கடிதங்கள் தரையில் இரைந்து கிடந்தன. சில காற்றில் பறந்து கொண்டிருந்தன.


“காத்திருந்து பூத்து விட்டள்! கடலோடு கலந்து விட்டாள்!’

“அவனுடன் அவள் ஒன்றி விட்டாள்!”


மூச்சு போனாலும் நினைவு போகாது,

மணல் கூட காத்திருக்கும் — அவன் காலடிக்கு.



 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...