Saturday, August 6, 2016

கம்ப காதை கேட்பீர்!

சின்ன  வயதில் வானொலியில், காரைக்குடி கம்பன் விழாவின் ஒரு நேரடி ஒலிபரப்பில் கேட்டு ரசித்த ஒரு குறுங்கதையை இங்கு பகிர்கின்றேன்.

கம்பனுக்குக் தான் கவிப்பேரரசன்  என்கிற செருக்கு எப்போதுமே உண்டு. அவன் ஆண்டவன் தவிர யாருக்கும்  வணங்காதவன் . ஒரு முறை சோழ மன்னன் எவ்வளவு விண்ணப்பித்தும் மன்னனைப் புகழ்ந்து பாட மறுத்து விட்டான். தவிரவும், அவையில் மன்னன் பிரவேசிக்கும்போது எல்லோரும் மரியாதை நிமித்தம் எழுவது வழக்கம்- கம்பனைத் தவிர. இது மன்னனுக்கு பெரும் மன உளைச்சலைத் தந்தது. மன்னனால் மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. ஊண் உறக்கம் இன்றித் தவித்தான். இராணியால் இதை நிவர்த்தி செய்ய முடியவில்லை, ஆதலால் பொன்னி என்கின்ற மன்னனுக்குப் பிரியமான ஒரு தாசியை அழைத்து விஷயத்தைச் சொன்னாள். பொன்னியோ, " என்னிடம் விட்டு விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, மன்னனிடம் சென்று " நாதா, கம்பனை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிம்மதியாக உண்டு ஓய்வெடுங்கள்", என்று சொல்லி விட்டு கம்பனை வீழ்த்த ஆயத்தமானாள்.

ஒரு நாள் கம்பன் கண்ணில் படும்படி அவள் வீதியில் வேண்டுமென்றே கீழே விழா, கம்பன் ஓடி வந்து அவளுக்கு உதவ, பொன்னி கம்பனைக் கடைக்கண் பார்வையால் கவர்ந்திட்டாள். கம்பனும் பொன்னியுடன் பொழுதை இனிது கழித்தான். பின்னர் அகம் மகிழ்ந்து " பொன்னி, நான் உன்னை மிகவும் மெச்சினேன் , உனக்கு ஏதாவது தர வேண்டும்போல் தோன்றுகிறது . என்ன வேண்டும், கேள்!" என்றான்.

பொன்னியோ ஒரு விஷமப் புன்வுருவலுடன் " எனக்கு வேறொன்றும் வேண்டாம். ஒரு ஓலையில் "தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை" என எழுதித்தாருங்கள்!" என்றாள். கம்பனும் அவ்வாறே செய்தான்.

மன்னனுக்கோ பெரு மகிழ்ச்சி. கம்பன் இனி தன் பாட்டுக்கு ஆடித்தான் ஆகவேண்டும் என்று கணக்கிட்டான். மறுநாள் அவை கூடியது. வழக்கம்போல் மன்னன் பிரவேசிக்க, எல்லோரும் எழ - கம்பன் மட்டும் ஒன்றுமே நடக்காததுபோல அமர்ந்திருந்தான். மன்னனுக்கோ சினம் சிரத்துக்கு ஏறியது. தாசியை கூப்பிட்டு அந்த ஓலையை படிக்குமாறு கட்டளையிட்டான்.

" தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை" என்கிற வாசகம் அவையில் ஆரவாரம் எழுப்பியது. எல்லோரும் திடுக்கிட்டனர். மன்னனோ கோபம் கொண்டு " கம்பனே , இது என்ன அசிங்கம்! இவ்வளவு பெரிய கவிஞர், ஆண்டவன் தவிர வேறு எவரையுமே பாக்களில் புனையாதவர், ஒரு தாசிக்கு அடிமையா?" எனக் கொக்கரித்தான்.

கம்பனோ, ஒன்றுமே நடக்காதது போல வெற்றிலையை மடித்து வாயிலிட்டுக்கொண்டான். ஒரு மந்திரி, ராஜாவிடம் காக்கை பிடிக்க எண்ணி, அந்த ஓலையை கம்பனிடம் காட்டி " இந்த கையெழுத்து உங்களுடையதுதானே?" என வினவ, கம்பம் " ஆம்! அதற்க்கென்ன?" என்றான், வெற்றிலையை மென்றுகொண்டே. மந்திரியோ " இப்படி பகிரங்கமாகப் பிரகடனப் படுத்த, உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?" எனக் கேட்டான்.

கம்பனோ சிரித்துக்கொண்டே , " இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? உள்ளதைத்தானே உரைத்துள்ளேன்?" எனச் செப்பினான்.

" தாசி பொன்னிக்கு நீங்கள் அடிமையா?" என மறுபடியும் கேட்க , கம்பனும் ஆம் என உறுதி செய்ய , எல்லோருக்கும் கம்பனை கோபமுடன் பார்க்க, கம்பனோ, அவசரப்படாமல் வெற்றிலையை மென்று விழுங்கிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெதுவாக  சொன்னான்: " மன்னா, தமிழ் மிகவும் நுணுக்கமான மொழி. நன்கு கவனியுங்கள். நான் உள்ளதைத்தான் எழுதிக் கொடுத்துள்ளேன். தமிழில் "தாசி" என்பதற்கு  " எல்லோரும் விரும்பத்தக்க" என்கிற பொருளும் உண்டு. "பொன்னி" என்பது கலைமகளுக்கு இன்னுமொறு பெயர். ஆக ,  " எல்லோரும் விரும்பத்தக்க சரஸ்வதிக்கு கம்பன் அடிமை" என்றுதான் எழுதித்தந்துள்ளேன் . இதில் என்ன தவறு கண்டார்கள்?" என எதிர்க் கேள்வி கேட்க, அவை முழுவதும் நிசப்தம் நிலவியது!!

தமிழின் இலக்கிய நயம் வட மொழியான சமஸ்க்ருதத்திற்குச் சமமானது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உண்டு. இந்த இலக்கிய நயத்தையும் ஆழத்தையும் அனுபவித்து மகிழ நிறைய கேட்க, படிக்க வேண்டும். கம்ப நயமே இவ்வளவு என்றால் , மற்ற நூல்களையும் காப்பியங்களையும் என் சொல்ல?

என் பார்வையில், இன்று தமிழ் மிகவும் நலிந்துவிட்டது. பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் பயின்ற தலைமுறையே தமிழைத் தவிர்க்கிறது. பின்னே, இந்த புதிய தலைமுறையை பழித்துப் புண்ணியமில்லைதான்.

வடமொழியும் வெள்ளையன் மொழியும் வாய் நுணியில் விளையாடுகின்றன. தப்பில்லைதான். பிழைப்புக்காகத் தேவைதான். ஆனால் உங்கள் முன்னே செந்தமிழ் என்னும் சொத்து சுவைக்க, சிறப்பிக்கக் காத்திருக்கிறது. முடியும்போதெல்லாம் தமிழில்த் திளையுங்கள். வார்த்தைகளின் வர்ணஜாலத்தை ரசியுங்கள்.





No comments:

How can India aspire to be a thought-leader?

Two seemly disjointed happenings triggered this article today.  One – I was walking down an old alley here in Singapore, where a signage in ...