Sunday, October 13, 2019

தில்லைவாழ் நடராஜனே

என் கன்னட நண்பனுடன் இன்று மாலை தொலைபேசியில் நடந்த ஒரு சிறிய உரையாடல் இது.

நான்: "கர்நாடகாவில் பற்பல புராதனக் கோவில்கள் பார்க்கக் சூப்பரா இருக்கு ."

அவன்: " நீ போயி இருக்கியா?"

நான்: " சில, பல கோவில்களுக்கு போயி இருக்கேன்.  கோகர்ணா, சிருங்கேரி, விரூபாக்ஷர், முருதேஷ்வர், கொக்கே சுப்ரமணியா, கொல்லூர் , உடுப்பி போன்றவைகளுக்கு.  ரொம்பவும் ரசிச்சேன்."

அவன்: " நானும் தமிழ் நாட்டின் பல கோவில்களுக்கு போயி இருக்கேன். தமிழ் நாட்டின் கோவில்களுக்கு இருக்கும் அழகு வேற எங்கயும் இல்ல. அதுவும் அந்த சிதம்பரம் நடராஜர் ஆடற அழகு இருக்கே! பாத்துக்கிட்டே இருக்கலாம். கொள்ளை அழகு!"

நான்: " ஆமாம், ஆமாம்!!"

இந்த சம்பாஷணை நடந்து ஒரு மணி நேரம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை. பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் அம்மாவை  வழக்கம் போல சக்கர நாற்காலியில் உட்கார வைத்து கடற்கரைக்கு ஒரு சுற்றுலா கூட்டிச் சென்றுவந்தேன். மாலை காற்று ரம்மியமாக வீச, நீச்சல் குளக்கரையில் சிறிது நேரம் உட்க்கார வைத்தேன்.

அம்மாவுக்கு கண் பார்வையும் கிட்டத்தட்ட போயி ஆயிற்று. அதனால், நீச்சல் குளத்தில் கும்மாளம் இடும் ஒரு 10 குழந்தைகளின் கூக்குரல் மட்டும் கேட்டது.

அம்மாவை எப்போதும் இப்படி சேட்டு நான் பார்த்தது இல்லை. திடீரென்று என்ன நினைத்தாளோ, வான் நோக்கி தலையை உயர்த்தினாள். இந்த பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டாள்.

 "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே".  நெஞ்சத்தைக் கிள்ளும் வரிகள்.

என்னை யாரோ சம்மட்டியால் அடித்தட்டு போல இருந்தது!

இந்தப்பாடல் என் அம்மா பாடி பல நாட்கள் கேட்டதுண்டு, நான் சிறுவனாக இருந்த போது. அப்போது எல்லாம் அதன் மதிப்பு விளங்கவில்லை. மறந்தே கூடப் போயிருந்தேன்.

பல வருடங்கள் கழித்து மறுபடியும் அதே பாடல். சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய "நடராஜ பத்து" என்ற பத்து வரிகள் கொண்ட பாடல். ஆந்தக்குடியில், வீட்டில் வேலை செய்யும் போது என் பாட்டி தினமும் பாடுவாளாம். அம்மா சொன்னது.

விந்தை என்னவென்றால், இத்தனை நாள் அம்மா வாயிலிருந்து இந்தப் பாடல் வரவில்லை.

தில்லை நடராஜர் புகழை என் கன்னட நண்பன் பாடி ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்கவில்லை, அம்மா வாயில் இருந்து அதே தில்லை புகழ், மீண்டும்!! பக்க வாதத்தினால் வார்த்தை சுத்தம் கொஞ்சம் குறைவுதான். ஆனால், அந்த நிமிடத்தில் ஏனோ, அம்மா மனம் உருக "தில்லை நடராஜா! பட்டது போதும்! என்னை விரைவில் வந்து ஆட்கொள்ளு!" என முறையிடுவது போல ஒரு பிரமை எனக்கு! தில்லை நடராஜர், எனக்கே அவரை ஞாபகப் படுத்துகிறாரோ? இல்லையென்றால், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என் கன்னட நண்பன் தில்லை தலம் பற்றி ஏன் பேச வேண்டும்? அவன் பேசி ஒரு மணி நேரத்துக்குள் அம்மாவும் தில்லை புகழை என் பாடவேண்டும்? ஏன்?

பாடி முடிக்கும் வரை அங்கேயே இருந்து, பிறகே வீடு வந்து சேர்ந்தோம்.

நடராஜர் நர்த்தனம் இன்னும் என் நாடிகளில்.
  

கண்ணைக் கொடுத்த நீயே - நடராஜா
கண்ணைப் பறித்தும் கொண்டாயோ?
எண்ணத்தில் நிற்கும் அம்பலவாணனே -எனை
மண்ணில் கலக்கவிட மனமிறங்காயோ?   







No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...