“அம்மா… இப்போவும் இந்த பொங்கல், கரும்பு, பானை எல்லாம் எதுக்கும்மா?
லீவ் கிடைச்சா ஊருக்கெல்லாம் போகணும், ஃப்ரெண்ட்ஸோட வெளில சாப்பிடணும். சும்மா பொங்கல், அது இதுன்னு....... ஹும்! ” தலையை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டே சொன்னாள்.
மலரின் குரலில் எதிர்ப்பு இல்லை; அலட்சியம் இருந்தது. அது அவளுடைய வயது.
சரஸ்வதி அடுப்படியில் நின்றபடியே திரும்பிப் பார்த்தாள்.குரல் உயரவில்லை; ஆனால் வார்த்தைகள் மெதுவாக அழுத்தமாக விழுந்தன.
“ஏஞ்ச அப்படி சொலுத ? பொங்கல் லீவுக்காக இல்ல. நாம என்ன சாப்பிடுறோம், அது எங்க இருந்து வருது, நாம எங்கிருந்து வர்றோம் ன்னு னெனச்சு பாக்கத்தான்!”
மலர் தோளைச் சுழற்றிக் கொண்டாள்.
“அம்மா… இப்போ எல்லாமே மாறிட்டு. கரும்பு கூட சூப்பர்மார்க்கெட்ல பாக்கெட்ல கெடைக்குது.”
சரஸ்வதி சிரிக்க முயன்று தோற்றாள். “கரும்பு பாக்கெட்ல கெடைக்கலாம். ஆனா அது எப்படி அங்க வந்துச்சுன்னு விஷயம் எல்லாம் பாக்கெட்ல வராது. அந்த இனிப்புக்குப் பின்னால எத்தன ஒழைப்பு , எத்தன பாசம், பரிவு, வேதனை , கஷ்டம் ... நெனச்சு பாக்கணும்ல... அதுக்குதான் பண்டிகை எல்லாம்....”
அவள் பேசிக்கொண்டிருந்தபோதே, மனம் பின் நோக்கி மெல்ல நழுவியது.
—--------
தை மாதத்தின் முதல் நாள். "பொங்கலோ பொங்கல்" என்று தன் தெருவில் உறக்கக் கூவி விட்டு, தலையில் கட்டி இருந்த முண்டாசை அவிழ்த்து சைக்கிள் சீட்டை தட்டி விட்டபடி விளையாடத் தயாராகும் ஒரு சிறுவனின் குதூகுலத்துடன் புறப்படடார்.
புலிவலம் கிராமத்திலிருந்து கீவளூர் செல்லும் மண் பாதையில் அந்த பழைய சைக்கிள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கேரியரில் முறையாக கட்டப்பட்ட கரும்புக் கட்டு. அதன் கீழே சிறு அரிசி மூட்டை. வெல்லம் தனியாக—பாதுகாப்பாக. சைடில் குடை. காலில் செருப்பு இல்லை. வயலில் வதங்கிய உடம்பு. உரம் பாய்ந்த கட்டை. கரும்பைப் போன்றே உறுதியான, கருத்த கைகள்.
அந்த சுமையைவிட, சைக்கிளை ஓட்டிச் சென்ற சுப்பையாவின் உள்ளத்தில் இருந்த பாரம் கனமானது.
அறுபத்திஐந்து வயது. ஆனால் முதுகின் வளைவு, முகத்தில் உறைந்த சோர்வு—அவை காலத்தை கொஞ்சம் முன்னே தள்ளியிருந்தன. தூக்கம் பல வருடங்களாக அவருக்கு அவ்வப்போது மட்டுமே கிடைக்கும் விருந்தாளி.
முட் காட்டுக்குள் சுள்ளி பொறுக்கப் போய் கட்டு வீரியன் கடித்து மனைவி இறந்து பத்து ஆண்டுகள் ஆகி இருந்தன. சரஸ்வதியை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க சுப்பையா பட்ட பாடு...
வருடங்கள் உருண்டு விட்டன. அதன் நடுவே வானம் பல முறை பொய்த்து விட்டு இருந்தது. பல முறை மூழ்கடித்தும் விட்டு இருந்தது. ஆதவன் அருளால் ஏதோ வாழ்க்கைப் படகு ஓடிக்கொண்டு இருந்து போலும் .
ஒரு வாரம் முன்பு சரஸ்வதி கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள்.
“அப்பா… இந்த வருசம் நீங்க வர வேண்டாம். நாங்களே வந்து எடுத்துக்கறோம் பா…”
“அடியே சரசு… உன் அம்மா இருந்தப்போ தை மாதம் கரும்பு நான் வந்து உன் கைல கொடுத்தேன். இப்போ அவ இல்லன்னு வழக்கம் மாறிடுமா? அப்பா பாசம் தூரம் எல்லாம் பார்க்காதுடி.”
அந்த வார்த்தைகள் அப்போது அவளை சமாதானப்படுத்தவில்லை. வயதான காலத்தில் அவர் கஷ்டப்படுவதை பார்க்கவும் சகிக்கவில்லை. ஆனால் அவர் பிடிவாதத்தை விடுவதாகவும் இல்லை.
காலை வெயில் சீக்கிரமே எரியத் தொடங்கியது. மண் பாதையில் தூசி எழுந்தது. சைக்கிளின் ஒவ்வொரு சுற்றும் சிரமமானது. . சிறிது கஞ்சி, எலுமிச்சை ஊறுகாய்—அவ்வளவுதான், புலிவலத்திலிருந்து புறப்படு முன்.
ஒரு ஆலமர நிழலில் சில நொடிகள். மார்பு இறுக்கம் கொஞம் அதிகமாகியது. மூச்சு சுருக்கமும் கூட. இடது கை நடுக்கம் வேறு.
அவர் தன்னைத்தானே மெதுவாக கண்டித்துக்கொண்டார்.
“இல்லடா சுப்பையா… இன்னிக்கி இல்ல. என் சரஸ்வதி மொகத்த பார்க்காம நான் போக மாட்டேன்.”
பாக்கெட்டிலிருந்து ஒரு பழைய புகைப்படம். சிறுமியான சரஸ்வதி—அம்மாவின் மடியில். அவர் அருகில். ஒரே பெண். கண்ணான கண். அந்தப் புகைப்படத்தில் அவர் வாழ்க்கை முழுவதும் அடங்கியிருந்தது.
கொஞ்ச நேரம் தான். சைக்கிள் மீண்டும் நகர்ந்தது.
கீவளூர் அருகே வந்தபோது, வெயில் உச்சத்தில் இருந்தது. ஆனால் வீட்டுத் தெருவுக்குள் சைக்கிளோடு நுழைவதே அவருக்கு தனி சுகம்.
வாசலில் சரஸ்வதி காத்திருந்தாள். ஒவ்வொரு தை மாதமும்—அதே இடம்.
தூரத்தில் கரும்பும், வளைந்த முதுகும் தெரிந்ததும் அவள் குரல் தானாக உடைந்தது.
“அப்பாஆ!”
சைக்கிளிலிருந்து இறங்கும் கணத்தில் அவர் தடுமாறினார். கால்கள் வலுவிழந்தன. ஓடி வந்து தாங்கினாள்.
“ஏன்ப்பா… நான் வர்றேனு சொன்னேன்ல… எம்பளது தரம் சொன்னாலும் எடுபடாது உங்க கிட்ட! ஏன் இப்படி பண்ணுதீங்க ...... ஹும்! ” தலையை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டே கடிந்து கொண்டாள்.
மூச்சு இடைஞ்சலாக, அவர் சொன்னன்— “அடியே… உன் வாழ்க்கை…இனிப்பா இருக்கணும்னு தான்…நேந்திக்கிட்டு.... இந்த கரும்பு… வாய்க்காலண்ட என் கையாலேயே நட்டு வெச்சு...... ” வியர்வை மழையில் குளித்து இருந்தாலும், ஏதோ பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்ற இராணுவ வீரனின் பொலிவு, முகத்தில். இந்த வருடம் சீர் கொண்டு வந்தாகி விட்டது… “ அடுத்த வருஷம்… பொழச்சுக் கெடந்தா பாத்துக்கலாம்”
அந்த இரவு அவர் அதிகம் சாப்பிடவில்லை. ஒரு பழைய கரும்புத்துண்டு மட்டும். மெல்லச் சவைத்தார். அமைதியாக.
அடுத்த நாள் காலை—அவர் எழவில்லை. கையில் புகைப்படம். முகத்தில் நிம்மதி. வாசலில் புதுக் கரும்புக் கட்டு அப்படியே இருந்தது.
----------------
“அம்மா… என்ன ஆச்சு?” மலரின் குரல் சரஸ்வதியை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.
அவள் எப்போது கண்ணீர் வந்ததென்று அவளுக்கே தெரியவில்லை. ஒரு சொட்டு—பின்னர் இன்னொன்று. அவள் அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஒன்னுமில்லம்மா,” என்று சொல்ல முயன்றாள். குரல் சிறிது தளர்ந்தது.
மலர் அவளை விசித்திரமாகப் பார்த்தாள். எதையும் கேட்கவில்லை. சரஸ்வதி அடுப்படியில் இருந்த கரும்பை வாஞ்சையுடன் வருடிணாள். அது கரும்பா, இல்லை சுப்பையாவின் கையா?
No comments:
Post a Comment