Saturday, December 7, 2019

25 காசு நாணயம்

இடம் : கண்ணகி எரித்து மிச்சம் இருந்த மதுரை
காலம் : 70கள்

சனிக்கிழமை. என்னை தேய்த்துக் குளித்திருந்தேன். ஆதலால் வெய்யிலில் கிரிக்கட் விளையாட அனுமதியில்லை .

என் வீடு ஒரு பெரிய செம்மண் திடல் முன்னே இருந்தது. மாடத்தில் இருந்து pavillion போல விளையாட்டுக்களை ரசிக்கலாம். என் ஐந்தாம் வகுப்பு சக மாணவர்கள் கிரிக்கட் விளையாட, மதுரை Melbourne ஆகி இருந்தது, என்னைப் பொறுத்த வரையில். என் pavillionநிலிருந்து ஆற்றாமையுடன் பார்த்து நொந்துபோய், வீட்டிற்க்குள் வந்தேன்.

பிரதி மதியம் வாசலில் grape ice விற்பவர் வருவது வழக்கம். அம்மாவிடம் காலையிலேயே மன்றாடி , 25 பைசா வாங்கி வைத்து இருந்தேன். ஏதோ மதுரை மாநகரத்தையே அந்த 25 பைசா கொண்டு வாங்கப்போவதாக ஒரு பெருமிதம். அது,  காலையில்.

இப்போதோ, மனமெல்லாம் விளையாட முடியாத வெறுப்பு. ஏதோ ஒரு நினைவில், 25 பைசாவை வாயில் போட்டு வெளியில் எடுத்து விளையாடிக்கொண்டு இருந்தேன்.  என்ன ஆயிற்றோ, இன்றுவரை விளங்கவில்லை. திடீரென்று பார்த்தால், 25 பைசாவாக் காணோம். சுற்றுமுற்றும் பார்த்தேன். உஹும் .

ஒரு வேளை விழுங்கி விட்டேனோ? அட! ஆமாம். அப்போதுதான் தொண்டைக்குள் ஒரு உறுத்தலை உணர்ந்தேன். ஐயோ! என்ன காரியம் செய்து விட்டேன்! தந்தையோ, ரயில்வேயில் guard வேலை. வழக்கம் போல் வெளியூர் பயணம். எப்போ வருவாரோ?

அம்மாவிடம் ஓடினேன். grape ice வாங்க 25 பைசாவுக்குக்கூட 25 முறை தயங்கும் காலம் அது.  தனியார் மருத்துவம் எல்லாம் எங்களை பொறுத்தவரையில் அப்போது எட்டாக் கனி.

அம்மா கடிந்து கொண்டாள். " ஏண்டா, இப்படி உயிர வாங்கற? அப்பா வேற ஊர்ல இல்ல. பகவானே! இப்போ என்ன பண்றது?" ஒருபுறம் கையிலோ காசில்லை. மறுபுறம் Diphtheriaவுக்கு அவளது முத்த மகளை பறிகொடுத்து இருந்த சோகம். ஒரு கணம் அவளது அவளது ஆற்றாமை அவளது நிதானத்தை வெற்றி கொண்டு இருந்தது . ஆனால், மறுகணம், திட்டிக்கொண்டே வீட்டிலிருந்த இரண்டு வாழைப்பழத்தை எண்ணையில் குளிப்பாட்டி என் வாயில் திணித்தாள். பின், அரை லிட்டர் தண்ணீர் என் பத்து வயது வயிற்றுக்குள் பத்தே நொடியில் போய் இருந்தது . சட்டெனத் தொண்டைக்குழியில் நிவாரணம்.

இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை என்பது அவளின் சிவத்த கண்கள் சொல்லின. காலை நான் எழுந்தவுடன் " டேய்! நன்னா ஆய் போடா. போயிட்டு தண்ணி விடாத. என்ன கூப்பிடு, சரியா?"

கூப்பிட்டேன்.

கையில் விளக்கமாற்றுக்  குச்சியடன் கழிவறையில் நுழைந்தாள்.  இந்த உலகத்தில் அது வரைக்கும் அத்தனை எதிர்பார்ப்புடன் மலத்தை யாரும் கிளறி இருக்க மாட்டார்கள். தங்கச்சுரங்கத்தில் பாறைகளை பிரித்துத் தங்கம் எடுத்தாள். அந்த நிமிடத்தில் அந்த 25 காசு நாணயம் 25 பவுன் தங்க நாணயமாக மாறி இருந்தது.

அம்மாவின் முகத்தில் நிம்மதி ரேகைகள் டிஸ்கோ ஆடின. என் பிஞ்சு மனதிலோ அவளின் நேற்றைய கோபக்கனலும் இன்றைய டிஸ்கோவும் மாறி மாறி  காட்சி அளித்தன. " தெரியாம தானே தப்பு பண்ணினேன். அதுக்கு போயி இவ்வளவு திட்டா? நேத்திக்கு அவ்வளவு வசவு ! இன்னிக்கிமட்டும் என்ன சந்தோஷம்? வர வர அம்மாவுக்கு என்ன கண்டாலே புடிக்கல!"

Trolley Forward!!!

*******************************

இடம் : சிங்கப்பூர். என் வீடு
காலம் : 2019 . இன்று

மணி அடித்தது . அம்மாதான். அன்று தங்கத்தைப் பிரித்து எடுத்த கைகள் காலத்தின் கோலத்தால் செயல் இழந்து இருந்தன, பக்கவாதத்தால். கண்களும் பார்வை இழந்து இருந்தன. அவள் படுக்கையில் கூப்பிட வைத்திருந்த மணி வழக்கத்துக்கு மாறாக இன்று நான் சென்று பார்ப்பதற்குள் இரண்டாம் மறுமுறையும் அடித்தாகிவிட்ட்து. ஏதோ பிரச்சனை போலும்.

ஓடிச்சென்று பார்த்தேன் . மோதிர விரலைப் பிடித்துக்கொண்டு சன்னமான குரலில் " டேய்! டேபிள் மேல இருந்த மோதிரத்த  தப்பான வெரல்ல போட்டுண்டுட்டேண்டா! கழட்ட முடியல. என்னன்னு பாருடா!"

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த கைகள். உணர்ச்சியே இல்லை. கண் தெரியாதனால் மோதிரம் நடு விரலில் தவறாகத் தஞ்சம் புகுந்து இருந்தது. சின்ன சைஸ் மோதிரம் அந்த நடு விரலை நெருக்கி, இரத்த ஓட்டம் இல்லாமல் விரல் வீங்கிப்போய் இருந்தது. மோதிரமோ மோகம் கொண்டு விரலை விட்டு விலக மறுத்தது . அவளுக்கு ஒரு புறம் வலியினால் வேதனை. மறுபுறம் முதுமைக்கே உரிய இனம் புரியாத ஒரு பயம்.

என் உடம்பு சில நாட்களாக என்னுடன் அக்கப்போர் செய்து கொண்டு இருந்தது ( அம்மாவுக்கு இந்த விஷயம் நான் சொல்லவே இல்லை, அனாவசியமாக கவலைப்படுவாள்) . டாக்டரைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டு இருந்த நேரம், இச்சம்பவம். எனக்கோ கோபம் தலைக்கேறியது. அம்மாவை இந்த நிலையில் விட்டு விட்டு நான் டாக்டர் அப்பாயிண்ட்மெண்டுக்கு எப்படிச் செல்ல முடியும்?

"ஏம்மா என் உயிர வாங்கற? அந்த மோதிரம் வேண்டாம்னு சொன்னேனே, கேட்டியா? இப்போ பார். சோப்பு போட்டு கழட்டப்பார்த்தாலும் முடியல. கட் பண்ண என் கிட்ட ஒண்ணும் இல்ல. ஏம்மா படுத்தற?!"

பாவமாய் என்னைப் பார்த்தாள்.

"டேய்! வந்த சொற்ப வருமானத்துல உன்னையும் உங்க அண்ணனையும் வளர்த்து ஆளாக்கர்துலேயே செலவு ஆயிடுத்துடா. உங்க அப்பாவால எனக்காக ரெண்டே ரெண்டு நகைத்தான் பண்ணி போட முடிஞ்சுதுடா. ஒண்ணு- செயின். ஒங்க அண்ணன் பாங்க் லாக்கர்ல இப்போ தூங்கறது. ரெண்டு- இந்த மோதிரம். இது  ஒண்னு தாண்டா அவர் நினைவா என் கிட்ட இருக்கு. இன்னிக்கி அவர் ஞாபகம் ரொம்ப வந்துதுடா... அதுதான்......... " காண இயலா அந்தக் கண்களில் செம்பரம்பாக்கம் ஏறி.

மறுகணம், என் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கான்சல் ஆனது.

போனைக்கொண்டு பிறரிடம் பேசும் காலம் போய் போனிடமே பேசும் காலம் இது.  " Google, show me goldsmiths in Singapore".

சுந்தர் பிச்சை உடனே பிச்சை போட்டார்.  அடுத்த அரை மணியில் தட்டான் தட்டாமல் மோதிரத்தை லாவகமாக வெட்டி எடுத்தார்.

அன்று நான் பார்த்த நிம்மதி ரேகை இப்போது மறுபடியும் அம்மாவின் முகத்தில் டிஸ்கோ ஆடியது ( காலத்திற்கு ஏற்ப அவள் தன்னை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டாள். இன்னும் டிஸ்கோதான்).

வழக்கம்போல என் மனதில் கோபமும் வெறுப்பும் மாறி மாறி zoom-in, zoom-out செய்து கொண்டு இருந்தன. "சே! இனிமே டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் திருப்பி எப்போ கிடைக்கும்? கெடச்சத நழுவிடும்படி ஆயிடுத்தே! அப்படி என்ன இந்த வயதில் , கண்ணும் தெரியாமல், அந்த மோதிரத்தின் மேல் மோகம்?" அம்மா செய்த சிறு தவறு வாமனின் மூன்றாவது அடி போல என் தலையை அழுத்திக்கொண்டு இருந்தது.

ஒரு கணம்தான். ஒரே கணம் தான். மேற்கூறிய 70களின் சம்பவம் என் கண் முன்னே நிழல் ஆடியது.

அன்று அவள் காட்டிய கோபத்தின் அர்த்தம் இந்த நிமிடத்தில் எனக்கு உறைத்தது. ஆனால்...   ஆனால்...    தங்கம் திரட்டிய பின் அவள் முகத்தின் நிம்மதி ரேகைகள்? என் முகத்தில் வர மறுத்தனவே! ஏன்? ஏன்?

அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன். இந்த நேரத்திலும் - அவளின் வலி தொலைந்து போனதை விட, என் வலியே எனக்குப் பிரதானமாகப் பட்டது. அதனால் தான் என் ஆத்திரம் இன்னும் தணிந்த பாடு இல்லை.

ஆனால், அவளோ? காசை நான் விழுங்கியிருந்த அப்போதும் - நான் மட்டும் தான் அவளின் கவனம் எல்லாம். இரவு முழுவதும் விழித்து இருந்து அந்த 25 பைசாவை மலத்திலிருந்து மீட்டு எடுத்தபோதும், அவளுக்கு தன்னைப்பற்றி ஒரு பொருட்டும்  இல்லை. அப்போதும் நான் தான் அவள் உலகம்.

தன்னிகர் இல்லாத் தாய் மனம் முன் தனயன் நான் எம்மாத்திரம்?

சக்கர நாற்காலியில், விரலை விட்டு மோதிரம் விலகிய சந்தோஷத்தில் மெல்ல முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்- "காப்பி"யில்.

"சின்னஞ்சிறு கிளியே, செல்லம்மா
செல்வக் களஞ்சியமே!"

(பி.கு .: என் தாயின் பெயர் செல்லம்மாள்) 

- திலீப் -















  

No comments:

Sticking with you

I am sticking with you, honey You make my whole wide world sunny When shadows creep and hopes feel few, My heart finds its brave light in yo...