Sunday, December 29, 2019

மதகுகள் மாறின

அன்று காலை சுப்பிரமணி மிகவும் பரபரப்பாகக் காணப்படர். எப்போதும் போல அவர் மனைவி தங்கம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து , இருட்டில் ஒரு லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டிலுக்கு சென்று "லட்சுமி " யைக் கறந்து, கொடியெடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு, வறுத்து வைத்திருந்த காப்பிக் கொட்டையை அரைக்கச் சென்றிருக்க, அவர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார்.

கொடியடுப்பில் வெந்நீர் ஒருபுறம், பால் மறுபுறம் என ஒரு பெரிய பித்தளை டம்பளர் நிறைய நுரைக்க நுரைக்க பில்டர் காபி வர, அதன் நறுமணமும் சுவையும் கட்டி இழுக்க, அவர் கவனமோ வேறு எங்கோ. அவசரமாக காபியை உள்ளே தள்ளி விட்டு, வயலை நோக்கி விரைந்தார்.

விடியற்காலை ஆதலால் வழி சரியாகப் புலப்பட வில்லை. ஆனாலும் பழகின பாதை. லாந்தர் இன்றியே விரைந்தார். தூரத்தில் எங்கோ ஒரு தோப்பில் மயில் கரைந்தது. மாடுகளை சில புலையர்கள் மேய்க்க ஆயத்தம்  ஆக, மாடுகளின் கழுத்து  மணியோசை, அக்காலை  பொழுதில் , மாரியம்மன் கோவில் மணியோசையுடன் போட்டி போட்டது. மெல்லிய ஆடி மாசக்காற்று குளத்துக்கரை பவளமல்லியின் வாசனையை சுமந்து வந்தது.

மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு lower delta எனப்படும் கீழக் காவிரி மாவாட்டப் பகுதிகளுக்கு வருவதற்கு சுமார் ஏழு நாட்கள் வரை பிடிக்கும். வீர சோழனாரு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, பாண்டவையாறு, அரசலாறு, கடுவையாறு, கோரையாறு, ஓடம்போக்கியாறு, பாமணியாறு எனக் காவிரி தாய் தன்னையே மாய்த்துக்கொண்டு பல பிரிவுகளாகி டெல்டா பகுதி மக்களுக்கு பாசனம் மூலமாக பாசத்தைக் காட்ட, அத்தண்ணீர் பட்டவாசல் வாய்க்காலுக்கு வர இன்னுமொரு ஐந்து  நாட்கள் வரை பிடிக்கும்.

அந்த ஆண்டில் மேட்டூரில் நீர் வரத்து கம்மிதான். சென்ற வாரம்தான் சுப்பிரமணி பஸ்ஸைப் பிடித்து சென்று தஞ்சையில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்திருந்தார். ஆடி மாதம். குறுவை நடவு நேரம். தண்ணீர் இல்லையென்றால், மக்கள் என்னதான் செய்வார்கள்? வானம் பார்த்த பூமி அல்லவா?

அத்தண்ணீரை மதகுகளில் தேக்கி வைத்து ஒவ்வொரு நிலமாக பாசனத்திற்கு பயன் படுத்துவது வழக்கம். கிராமத்தாரின் mini dam எனப்படும்  மதகுகள் ஒவ்வொரு நிலச்சுகாந்தாரின் நிலத்திற்கு அருகிலும் மூங்கிலினால் குறுக்கும் நெடுக்குமாக வெளி போல பின்னப்பட்டு வைக்கோல் கொண்டு அடைக்கப்படுவது வழக்கம்.

அதில் நிறைய நீர் திருட்டு ( அந்த காலத்திலேயே) நடப்பது வழக்கம். அதை மேற்பார்வை இடவே இந்த விடிகாலை விரைவு வரவு, சுப்பிரமணிக்கு. யாராவது நீரை எடுத்துக்கொண்டு விட்டால், பின், பாசனத்துக்கு என்னதான் செய்வார், பாவம்? கடைசி மகள் கல்யாணம் வேறு பங்குனியில் கன்னிகாதானம் செய்தாக வேண்டுமே! நல்ல சாகுபடி இருந்தால் தான் அது சாத்தியப்படும்?

"மதகு திறக்கும் நேரம் ஆகி விட்டதே! கோவிந்தராசு வந்திருப்பானோ?"

"கும்புடுறேங்கைய்யா!" வந்து விட்டிருந்தான்.

"வா கோவித்து. இன்னிக்கி வீட்டிலையும் நெறய வேலை கெடக்கு. சம்பந்தி வராரு! இதரப்படியெல்லாம் பேசி முடிக்கணும்!பாத்திரம் பண்டம், சீர் செனத்தி , நக , வரதட்சனை ......    எல்லாம் நல்லபடியா முடியணும்! வா! வேலைய சுருக்க கவனிப்போம். "

" ஆகட்டுங்கயா!"

உடனே வாய்க்காலில் இறங்கினான். வைக்கோலை அகற்றினான். மணி அடித்தவுடன் ஆர்ப்பரித்துக்கொண்டு பள்ளிக்கூடத்தை விட்டு ஓடும் குழந்தைகளைப்போல நீர், ஒரு குதூகுலத்துடன் வரப்பைத் தாண்டி வயலுக்குள் பாய்ந்தது நீர்.

"வணக்கம் அய்யா! நல்லா இருக்கீயளா?"

குரல் கேட்டுத் திரும்பினார். சன்னமான குரலுக்குச் சொந்தக்காரர் நல்லதம்பி . பக்கத்து நிலக்காரர்.

" ஏஞ்ஜ நல்லதம்பி! என்ன காலங்கார்த்தால வயப்பக்கம்? ஒன்னோட மொற இன்னும் ரெண்டு நாளைக்கு பொறவுதானே?"

"அது வந்துங்கய்யா ....." வயதில் சிறியவரான நல்லதம்பி இழுத்தார்

" சும்மா தயங்காம சொல்லு!"

" அதுங்கய்யா...   என் சின்ன பொண்ணுக்கு ஒரு வரன் வந்து இருக்கு. அதுதான் ஒங்கள ஒரு வார்த்தை கேக்கலாம்ன்னு ... "

" அட! காலங்கார்த்தால நல்ல சமாச்சாரமா சொல்ற! ரொம்ப சந்தோசம். பையன் என்ன செய்யறான்? வெவசாயியா?"

"இல்லீங்க்யா! அவுக அய்யா எட்டுக்குடில மிராசுதார். பையன் இங்க கீவளூர்ல ஆரம்ப சுகாதார நெலயத்துல டாக்ட்டரா இருக்காருங்கயா!"

"அட்றா சக்கை! புளியங்கொம்பாதான் புடிச்சு இருக்க! ஆமா, டாக்டராச்சே! வரதட்சணை நெறய எதிர் பார்ப்பாங்களே! ரெண்டு  புருஷம் முன்னாடிதான் ஒன் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணின! எப்படி சமாளிக்கப்போற?"

" அய்யா! 4 வேலி நெலத்த நம்ம ராவுத்தருக்கு விக்கறதா ஏற்ப்பாடு. அது போக,  இந்த வருஷம் நல்ல வெளச்சல் வந்தாதான்யா....  "

"ஓ!!".......

இரண்டு நிமிஷம் மௌனம் ....  என்ன நினைத்தாரோ.........

"டேய் கோவிந்து!"

வந்தான்.

" அந்த வைக்கோல நம்ம நிலத்து பக்கம் அடைச்சு வை! தண்ணீ மொதல்ல நல்லதம்பி நெலத்துக்குப் போகட்டும்!"

" அய்யா! என்ன சொல்றீய?....   "

" செரியாத்தாண்டா சொல்லி இருக்கேன்! சொன்னத செய்டா"

மூன்று தலைமுறையாக அவர் பண்ணையில் கோவிந்துவின் குடும்பம் வேலை பார்த்து வந்தது. எதிர்ப் பேச்சு பேசி பழக்கம் இல்லை.

"ஆவட்டும்யா".

அடுத்த பட்டாவது வது நிமிடத்தில், நீர் நல்லதம்பியின் நிலத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது.

" அய்யா! ஒங்களுக்கு எப்படி தெரியும், நான் இத தான் கேப்பேன்னு?..  " நா தழுதழுத்தது , நல்லதம்பிக்கு.

"என் வீட்டிலேயும் ஒரு பொண்ணு கல்யாணதுக்கு நிக்கறா! பொண்ண பெத்தவனுனுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாதா? இந்த கால வேளைல வேற எதுக்கு வரபோற?"

" அப்போ, நீங்க என்ன செயவீய? ஒங்க பொண்ணு கல்யாணம் பங்குனியில இல்லையா? அதே மொடை தானே உங்களுக்கும்?"

" எம்பளது வருஷத்துக்கு அப்புறம் இந்த வருஷம் கெரகம் எல்லாம் நல்லா இருக்குன்னு சோசியரு சொன்னாரு! நாட்டுல வெளச்சல் அமோகமா இருக்குமாம்!

நாம் கும்புடுற என் மாரியாத்தா கை விட மாட்டா ! ஒனக்கு குடுத்தது போக நிச்சயம் எனக்கும் குடுப்பா! என் பொண்ணு கழுத்துலேயும் நல்லபடியா தாலி ஏறும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எதுக்கும் கவல படாம ஆகவேண்டியதப் பாரு!"

கோவிந்தராசுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "டே கோவிந்து! கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு! பணத்த எப்படி பொரட்டப் போறேனோ? தெரியல! மாரியாத்தா தான் ஒரு வழி விடணும்!" இது நடந்தது நேற்று. அட, ஒரு மணி நேரம் முன்புகூட கவலை தோய்ந்த குரலில் காரகரத்தாரே! இப்போதோ, கதையே வேறாகி விட்டதே!

ஒன்றுமே நடக்காதது போல , மற்ற வயல் வேலைகைளை கவனித்துவிட்டு திரும்பி நடந்தார், சுப்பிரமணி . இப்போது மணி காலை பத்து. காத்திருக்கும் தன் கடைக்குட்டி மகளின் முகம் கண் முன்னே வந்து போனது. மெல்ல, ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே வீடு நோக்கி நடந்தார்.

வழியில் ஆரம்பப்பள்ளி. மரத்தடியில் பிள்ளைகள், உரத்த குரலில் அவ்வையாரை அழைத்தனர்  :


“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”

*****************************************

திலீப்




No comments:

Sticking with you

I am sticking with you, honey You make my whole wide world sunny When shadows creep and hopes feel few, My heart finds its brave light in yo...