Saturday, May 29, 2021

முத்தப் பருவம்

"டேய் கார்த்திக் ! அங்க வந்து வால சுருட்டி மடில வெச்சுகிட்டு நல்ல பையனா நடந்துக்கணும். புரிஞ்சுதா?"

ஆன்லைன் ஸ்கூல் முடிந்த கையோடு அரக்க பறக்க தன் 6 வயது மகனை கிளம்ப தயார் படுத்திக்கொண்டே புவனா செய்த உபதேசம் அது. ஆயிற்று! இன்னும் பத்தே நிமிடத்தில் ரவி ஆபிசிலிருந்து வந்து விடுவான். மூவரும் லண்டனிலிருந்து புதிதாயாய் மாற்றல் ஆகி வந்திருக்கும் தன் தோழி சுதாவை பார்க்கப்  போகின்றார்கள் .

தோழியை நெடுநாள் கழித்துப் பார்க்கப்போகிறோம் என்கிற பரபரப்பு ஒரு புறம். போகிற இடத்தில் கார்த்திக் விஷமம் ஏதும் செய்யாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை இன்னொரு புறம்.

***

"வாடி! ஏன் இவ்வளவு லேட்?" செல்லமாக கடிந்து கொண்ட சுதாவை மெலிதாக அணைத்துக்கொண்டாள். ரவி வருணுடன் (சுதாவின் கணவன்) கதைக்கக் கிளம்ப,

"அஷ்வின் ! இங்க வா. யார் இதுன்னு பாரு!" தன் 6 வயது மகனை கார்த்திக்கிற்கு அறிமுகம் செய்ய, இரு பையன்களும் சிட்டாயப் பறந்தனர், விளையாட. 

புவனா மனதுக்குள் ஒரு பதைபதைப்பு. " டேய் கார்த்திக்! ஜாக்கிரதை ! எதையும் போட்டு உடைக்காம விளையாடு!" உள் மனதில் பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது, இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதென்று. தன் கண் எதிரில் கார்த்திக்கை வைத்துக்கொள்ள விரும்பிய அவளை " வாடி! கிச்சன்ல பேசிக்கிட்டே காபி போடலாம்!" என்று இழுத்துக்கொண்டு போனாள் சுதா. 

கிச்சனுக்குப் போய் இரண்டே நிமிடத்தில் " க்ளிங்!"   

அது தன் மனது உடைந்து நொறுங்கும் சத்தமா? இல்லை, ஹாலில் ஏதாவது உடைந்ததா?

ஹாலுக்கு ஓடினாள். பயந்தது நடந்தேறி இருந்தது.  இத்தாலியில் இருந்து இறக்குமதியான, விலை உயர்ந்த கண் கவர் கண்ணாடியிலால் Blow moulding முறையில் வடிவமைக்கப் பட்ட Venetian Gondola Souveneir , சுக்கு நூறாகத் தரையில். 

அவமானம் கலந்த கோவம் தலைக்கு ஏறியது. " வரும்போதே சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன். ஏன் இப்படி என் உயிர வாங்குற?" 

"அம்மா! நான் உடைக்கலம்மா!"

இப்போது ஆத்திரம் அவள் கண்ணை மறைத்தது. " செய்யறதையும் செஞ்சிட்டு பொய் வேற!" அவன் அவன் முறையீடுகளைப் பொருட்படுத்தாமல், பாத்திரகாளியாய் மாறினாள். வந்த ஆத்திரத்தையெல்லாம் ஒருசேரக் காட்டிவிட்டாள். 

கார்த்திக்கின் கன்னத்தில் அவளின் ஐந்து விரல்கள் பதிய, அந்தப் பிஞ்சு மனதில் அவமானமும் சோகமும் பதிய, கேவிக் கேவி அழலானான். 

"சீ! பாவம்டி! ஏன் இப்படிப் போட்டு அடிச்ச? ஏதோ தெரியாம உடைச்சுட்டான், விடு!" . சுதா. 

"இவன் எப்பவுமே இப்படித்தாண்டி. எல்லாத்தையும் போட்டு உடைக்கறதே வேலையாய் போச்சு!" 

வீடு திரும்பும் வரை அவன் கேவல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் கண்ணீரின் கறைகள் பதிந்து இருந்த காய் ரேகைகளை அழிக்கப் பார்த்து தோற்று விட்டு இருந்தன. எதுவும் சாப்பிடாமலேயே, கேவியபடியே தூங்கி இருந்தான்.  அவள் கோவமோ இன்னும் தீர்ந்த பாடில்லை. 

மனதின் ஓர் ஓரம் சொல்லிற்று " ஓவர் ரியாக்ட் செயது விட்டோமோ?"

" சே! இல்லை. அவனுக்கு இந்தப் "பாடம்" தேவைதான்".

" ஐயோ! குழந்தைக்கு ரொம்ப வலித்து இருக்குமோ? மூர்க்கத் தனமாய் அடித்து விட்டோமோ?"

" இருந்தாவும் அவன் செய்யத தப்பை அவனுக்கு வேற எப்படித்தான் உணர்த்துவதாம்? சொன்னா கேட்டாத் தானே"

"இப்படி ராத்திரி ஒண்ணுமே சாப்பிடாமல் தூங்கிட்டானே! கொஞ்சம் பாலாவது குடுத்து இருக்கலாம்".  

 இரவு பத்து மணி சுமாருக்கு, சுதாவின் போன். 

"டீ இவளே! அஷ்வின் ரொம்ப சங்கடப்படறான். இப்போதான் சொன்னான். அந்த Souveneir உடைச்சது அஷ்வின் தானாம். கார்த்திக் இல்லயாம்!" 

சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. "ஐயோ! என்ன காரியம் செய்து விட்டோம். தீர விசாரிக்காமல் குழந்தையை இப்படி எல்லார் முன்னிலையிலும் தண்டித்து விட்டோமே! அந்த பிஞ்சு மனம் என்னப் பாடு பட்டு இருக்கும்? ஐயோ!"

கட்டிலில் மரவட்டை போல சுருண்டு அயர்ந்து தூங்கும் தன் செல்வத்தை நீர் மல்க நோக்கினாள். வாஞ்சையுடன் தலையைக் கோதி  விட்டாள். " அம்மாவை மன்னிச்சுடுடா கண்ணா!" 

மனம் காகிதக் கப்பலாய்த் தத்தளித்தது. புரண்டு புரண்டு படுத்தாள்.  எப்போது தூங்கினாளோ , அவளுக்கே தெரியாது.

***

ஆதவன் அவள் கன்னத்தில் சுளீர் என்று அறைய, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். கார்திக்கைக் காணோம், பக்கத்தில். 

பதைபதைப்புடன் ஹாலுக்கு வந்தாள்.

சோகமாய் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். கன்னச்சிவப்பு கொஞ்சம் குறைந்து இருந்தது. கண்ணீர்க் கறைகள் காய்ந்து இருந்தன. அவன் கண்களில் சோகமும் கோவமும். 

"சாரிடா கண்ணா! போனா போறது, விடு!"

அவனை அணைத்துக்கொள்ள முயன்றாள். " எனக்கு அம்மா வேண்டாம், போ!" திரும்பிக் கொண்டான்.

" அம்மா தப்பு பண்ணிட்டேன்டா. அப்புறமாத்தான்  தெரிஞ்சுது.  நீ அத உடைக்கலன்னு . என் பட்டுக் குட்டி! சாரிடா!" அவன் கன்னத்தில் அவசரமாக உதட்டைப் பதித்தாள். கன்னத்தில் அவன் கண்ணீரால் அழிக்க முடியாத அவள் கை ரேகைகளை இப்போது அவள் உதடுகள் அழிக்க பிரயத்தினப் பட்டன. 

"வேண்டாம் போ!" அவளைத் தள்ளி விட்டான். 

" அம்மாவுக்கு ஒரே ஒரு முத்தா குடுடா. என் ராஜா! என் பாலா முருகா! ஒனக்கு புடிச்ச Maggi Noodles பண்ணி தர்றேன் வா!"

" இப்போவே 3 பாக்கெட் பண்ணி குடு. அப்போதான் முத்தா தருவேன்!"

வாரி அணைத்தாள். உச்சி முகர்ந்தாள்.  ஒரே நொடியில் அவள் மனதின் அழுத்தத்தை எல்லாம் அந்தப் பிஞ்சு உதட்டின் பதிப்புப் போக்கி விட்டது.

=======================

கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலையுண்டு

தத்துங் கரட விகடதட
தந்திப் பிறைக் கூன் மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு

தழைத்து கழுத்து வளைந்த மணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு

கொண்டல் தரும் நித்திலம் தனக்குக்
கூறுந்தரமுண்டு உன் கனிவாய்
முத்தம் தனக்கு விலை உண்டோ

முருகா ...... முத்தம் தருகவே

முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.

--- பகழிக் கூத்தரின் "பிள்ளைத் தமிழ்"

பாடல் விளக்கம் :

முழங்கும் அலை வருந்தி வெண்மனல் சொரிந்த முத்துக்கும் ஒரு விலையுண்டு. யானையின் பிறைச் சந்திரன்போல் வளைந்திருக்கின்ற கொம்பில் தெரிகிற முத்துக்கும் விலையுண்டு. தழைத்து கழுத்து வளைந்த நெற்கதிருக்கு கூட ஒரு விலையுண்டு. ஆனால் உன் கொவ்வைக் கனிபோன்று வாயின் முத்தம் விலை மதிப்பற்றதன்றோ , முருகா! 

திருச்செந்தூர் கடற்கரையில் முத்தம் சொரியும் கடல் அலையாய் வருக! முத்தம் தருக, முதல்வா! 


=======
கத்தும்-முழங்கும். தரங்கம்-அலை. கடுஞ்சூல்-கடுமையான கருப்பம். உளைந்து-வருந்தி. வாலுகம்-வெண்மணல். கான்ற மணி - சொரிந்த முத்து. கரடம்-மதம். விகடம்-விகடக் கூத்து, உன்மத்தமுமாம். தடம்-மலை. தந்திப் பிளைக்கூன் மருப்பு-யானையின் பிறைச் சந்திரன்போல் வளைந்திருக்கின்றகொம்பு. தரளம்-முத்து. சாலி-நெல். கொண்டல்-மேகம். நித்திலம்-முத்து. கனிவாய் முத்தம்-கொவ்வைக் கனிபோன்று வாயின் முத்தம்

No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...