கோவில் நடை வாசல்தனில் காலணிகள் கழற்றினேன்
நாவில் பல நாமங்களை ஜபித்தபடித் திரும்பினேன்
செருப்புதனைக் காத்திடவே காசு பல கேட்டார்கள்
மறுப்பின்றி நானும் அதை மகிழ்வுடனே கொடுத்திட்டேன்.
இடைமறித்தாள் பூக்காரி இங்கிதமாய் போணி செய்ய
தடையின்றி அளந்திட்டாள் முழங்கையால் பூமாலை
காசுக்குப் பூ வாங்கி கடவுளுக்குச் சார்த்தினால்தான்
மாசு அற பக்தியை நான் பறை சாற்று வேனாம்.
தனிமையிலே தியானிக்கத் தடை இருக்காதெனவே
சன்னதியில் சேவிக்க வேகமாய் உள் சென்றேன்
என்கதியோ என்னென்று உறைப்பேன் நான் இறைவா!
சிறப்பு தரிசனம் பெறச் செலவு தனிச்சீட்டு
மறுப்பு சொல்லாமல் அர்ச்சனைக்கு ஒரு தட்டு
ஐய்யனுடன் ஒன்றிடவோ இன்னும் பல இன்னல்கள்
ஐயர் எனை விரட்டி விடும் கொடுமையான கோஷங்கள்
பக்தியை விற்றிடவே தவித்திடும் தரகர்கள்
புத்தியை மழுக்கிவிடும் பொய்யான போதகர்கள்
போதுமடா இறைவா உன் கோவில்களின் அவலங்கள்
தூது எவரும் வேண்டாம் உன் பாதம் பற்றிடவே.
No comments:
Post a Comment