Sunday, January 12, 2020

ஒரே பிரச்சனை - இரண்டு தீர்வுகள்

ஒரே பிரச்சனை - இரண்டு தீர்வுகள்


போர்டு மீட்டிங் (Board meeting) தொடங்கவிருந்தது. என் பாஸ் (சேர்மன்) சகிதம் எல்லா டைரக்ட்டர்களும் இருக்கையில் அமர, நடக்கப்போகும் காரசாரமான விவாதங்களின் அறிகுறியாய் , காப்பி கப்புகளின் மேல் ஆவி பறந்தது.

முக்கிய அலுவல்கள் முதலில் விவாதித்து, ஓட்டெடுப்பு முடிந்து. பின், என் முறை வந்தது. மனதின் ஒரு மூலையில் எழுந்த சிறிய பயம் கலந்த அவநம்பிக்கையை முலையில் ஒதிக்கினேன். சீதையின் கரம் பற்றுவதற்கு முத்தாய்ப்பாக வில்லுடைக்கப் புறப்படும் இராமனின் மிடுக்கு இப்போது என்னிலும் வியாபித்திருந்தது. திரையில் கடந்த ஒரு மாதமாக பகலிரவு பார்க்காமல் நான் தயாரித்து இருந்த பவர்பாயிண்ட் (Powerpoint presentation) நிழலாட,

"குட் மார்னிங். கடந்த சில வருடங்களாக நம் கம்பெனியின் செயல்பாடு லாபகரமாக இல்லை என்கிற பங்குதாரர்களின் குற்றச்ச்சாட்டு தெரிந்ததே. இந்த புதிய "க்ளவுட் கம்ப்யூட்டிங்"   தொழில்நுட்பம் நம் கம்பெனியின் செயல்பாட்டைத் தாக்கியுள்ளது. நம்முடைய எல்லா கஸ்டமர்களுக்கும் இப்போது இது அத்யாவஸ்யம் ஆகி விட்டது.

நாம் தொழில் போகும் பாதையில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்க , நாம் இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்கின்றோம் . இது உடனே மாறவேண்டும்.  நம் கம்பெனிக்கு ஒரு புதிய பாதை உடனே தேவை ."க்ளவுட் கம்ப்யூட்டிங்" எவ்வளவு சீக்கிரம் அரவணைக்கிறோமோ, அவ்வளவு நல்லது."

அடுத்த முப்பது  நிமிடங்களில் , மேகக் கணிமையினால் வரக்கூடிய நன்மைகள், அவை கிடைக்க  எடுக்கவேண்டிய நடவைடிக்கைகள், செய்ய வேண்டிய மறுசீரமைப்பு, முதலீடு மற்றும் ஆள்பலம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிமுடித்தேன். முப்பத்தியெட்டு  வயதில் டைரக்டர் ஆக்கப்பட்ட எனக்கு இப்படி ஒரு strategy presentation அதுவும் போர்டின் முன்பு , செய்வது, எனக்கு இதுவே முதல்முறை. போர்டு இதை ஏற்குமா? ஏற்காதா? இதயம் பக்-பக் என அடித்துக்கொள்ள, தண்ணீர் பாட்டிலில் தஞ்சம் புகுந்தேன்.

அடுத்த பத்து செகண்ட். அந்த அறையின் மௌனம் பத்து யுகங்களாய் மாறியிருந்தது. நிமிர்ந்தேன். பலத்த கரகோஷம். எல்லோரும் என் கையைப்பற்றி தத்தம் சந்தோஷத்தை தெரிவித்தனர்.

சேர்மன் : " பாலு முன்மொழிந்துள்ள பிளான் பிரமாதம். இதற்கான எக்சிக்யூஷன் உடனே நடந்தாக வேண்டும். பாலு, இது உன் பேபி. நீயே இப்பிளானுக்கு ஆசான். அதனால் நீயே இதனை மேற்ப்பார்வை இட்டு , முடித்துத் தர வேண்டும். உன் பிளான் படி 18 மாதத்தில் இந்த பிசினஸ் டிரான்ஸபார்மேஷன் நடந்தேற வேண்டும். சரியா?"

" அது வந்து சார்... இப்போது  எனக்கிருக்கும் பொறுப்புகளுக்கு நடுவே இந்த அதிகப்படி பொறுப்பையும் எடுத்தால்  என்னால் ....  "

" பாலு, உன்னைப்பற்றி எனக்கு நன்றாகத்  தெரியும். உன்னால் நிச்சயம் இரண்டையும் ஒரே நேரத்தில் செவ்வனே செய்ய முடியும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இதற்கான டீம் உடனே அசெம்பிள் செய்"..

மேஜையைத்தட்டி மற்ற டைரக்டர்களும் ஆமோதிக்க, எனக்கு தலை சுற்றியது. தான் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு விட்டோமோ? போர்டு மீட்டிங் முன்பே இரண்டு டைரக்டர்களையாவது பிடித்து வேறொருவர் பெயரை முன்மொழியச் செய்திருக்க வேண்டுமோ?எப்படிடா சமாளிக்கப் போகிறோம்?

போர்டு மீட்டிங்கின் மற்றைய அலுவல்கள் என் கண் முன்னே நடந்தேற, என் மனக்குதிரையோ எங்கோ பறந்து.

மீட்டிங் முடிந்ததுதான்  தாமதம், என் டென்ஷன் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கும் வேட்பாள ருக்கு இருப்பதை  விட பல மடங்கு அதிகமாகி இருக்க, மலை 6 30 யை காட்டியது என் கடிகாரம். விடுவிடுவென என் காபினுக்கு வந்து, என் லாப்டாப் மற்றும் இதரப் பொருட்களை வாரிச்சுருட்டி பையில் அடைத்தேன். போனை எடுத்தேன்

" முத்து! வண்டிய எடு!"

நான் லாபிக்கு வரவும், முத்து வண்டியை முன்னிறுத்தவும் சரியாக இருந்தது.

"க்ளவுட் 9 க்கு போ!"

" சார்...   வந்து....  "

"என்ன? பெட்ரோல் இல்லியா? மொதல்லேயே போட வேண்டியதுதானே? "

" அது  இல்ல சார்... வந்து....   இப்போதானே  மணி  6.30 ஆகுது... அதுக்குள்ளயே ட்ரிங்க்ஸ் ஆரம்பிச்சா...   "

" சொன்னத செய்! கேள்வி கேக்காத!"

செய்யதான்.

"க்ளவுட் 9" க்குள் நுழைந்து 15 நிமிடமே ஆகி இருந்தது . அதற்குள் 2 பெக்குகள் உள்ளே தள்ளி இருந்தேன். திருப்தி இல்லை. மன உளைச்சலுக்கு மருந்து வீட்டில் இருந்தது ஞாபகம் வர,

" முத்து! வண்டிய எடு!"

அடுத்த 30 வது நிமிடம். மாளிகை போல இருந்த என் வீடு வந்தது. சமையல்காரன் வந்து கதவைத் திறக்க, சென்று சோபாவில் அமர்ந்தேன் . எதிரே மாலையிடப்பட்ட அம்மா-அப்பாவின் உருவப்படம் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. "ஏண்டா! எங்களுக்கு நீ ஒரே பிள்ளை! 38 ஆகியும் இப்படி தனி மரமா நிக்கறியே! இந்நேரம் 2 குழந்தைகளுக்கு அப்பன் ஆகி இருக்க வேண்டும் ! இப்போ பார்! வீட்டுக்கு வந்தாக்கூட உன் கஷ்டத்த சொல்ல ஆளில்ல! என்ன செய்யப்போற?"

" யார் சொன்னா நான் தனி மரம்ன்னு? இப்போ பார்!" சூளுரைப்பதுபோல் எழுந்தேன் .

மாடியில் என் பெட்ரூமில் வந்ததுதான் தாமதம். டிராயரைத் திறந்தேன். எல்லாவற்றிற்கும் அடியில் ஞாயிறன்று விக்டர் கொடுத்து இருந்த புது "சரக்கு" பொட்டலம் என்னைப்பார்த்து " யாமிருக்க பயமேன்?" எனச்சிரிப்பது போல இருந்தது.

பேப்பர் ஒன்றை சுருட்டினேன். சரக்கை மேசைமேல் கொட்டி, ஒரு மூக்கைப் பொத்திக்கொண்டு மறுமூக்கில் மெல்ல இழுத்தேன். "இழுக்க இழுக்க இன்பம்" என்பார்கள். உணர்ந்தவர் மிகக்  கொஞ்சம். அதில் நானும் ஒருவன்.

ஆயிற்று . ஐந்தே நிமிடம். இதோ வந்து விட்டாள்.  ஐந்து அடி ஆறு அங்குலம்... பார்ப்பவர்களை மயக்கும் வதனம். மேல்நாட்டின் செண்டு வாசம் மதுரமாய் காற்றில் பறந்து வர, வந்தவள் மெல்ல என் தலையை அவள் வாளிப்பான தொடைகளில் கிடத்திக்கொண்டு என் காதுகளின் ஓரம் பட்டும் படாமலும் அவள் அதரங்களைக்  கொண்டுவந்து " என்னடா கண்ணா! நெஞ்சு பாரமா இருக்கா?" கவல படடாத...இன்னிக்கு ஒன்ன சொர்கலோகத்துக்கே கூட்டிட்டு போறேன்!" தலையை மெதுவாகக் கோதி விட...

"அது...   இந்த புது ப்ராஜெக்ட் ...   வேலிலப் போற ஓணான மடியில....."

"....     ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.............     "

என் மனதில் ப்ராஜெக்ட் மெல்ல மறைய, அவள் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தாள்....... மேகக் கணிமை மேகத்தில் மறைந்து விட்டிருந்து....... 

"சாப்பாடு ரெடிங்கயா!"  சமையல்காரன் வந்து, என் பெட் ரூமில் நுழைந்துகொண்டே....

பார்த்தான். தனிமையில் ... அலங்கோலமாக..  படுக்கையின் குறுக்கே நான்...  சுருட்டிய பேப்பர் மேஜை மீது ...     மெல்லப்  புரிந்துகொண்டு வெளியேறினான்.




*******************************************************




"ராஜாதி ராஜ...   ராஜமார்த்தாண்ட ... ராஜகம்பீர...   ராஜகுலதிலக ...  தஞ்சைத்தனையன் .......   இரண்டாம் குலோத்துங்க மன்னர்   ... பராக் ... பராக் ... பராக்!!"

அரசவை எழுந்து மன்னருக்கு மரியாதை செய்ய , கம்பீரமாக சிம்மாசனத்தில் அமர்ந்த மன்னன், கையால் செயக்கை செய்ய , அனைவரும் அமர்ந்தனர்.

தில்லையம்பலரின் திடமான பக்தனான மன்னன், முதன்மந்திரியான சேக்கிழாரைப் பார்த்தான் . அவர் எழுந்து, தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்...   "மன்னா! நாட்டில் எல்லாம் அம்பலத்தான் அருளால் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது..  தங்களது மாட்சிமையில் எந்த ஒரு குறைக்கும் இடமே இல்லை. மாதம் மும்மாரி பொழிந்து சோழ ராஜ்ஜியம் செழிப்பு ராஜ்ஜியம் என பேரெடுத்து உள்ளது. சொல்ல வேறு விஷயம் என்னிடம் இல்லை.....   !"

மன்னனின் கண்களும் அவர் கண்களும் ஒரே நிமிடம், ஒரே நிமிடம், சந்தித்துக்கொண்டன. சேக்கிழாரின் வாய் சொன்னதற்கும் கண்கள் கதைப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை மன்னன் உணர்ந்தான். மற்ற மந்திரிகளும் அசரவை உறுப்பினர்களும் கொண்டு வந்த கவன ஈர்ப்புகளுக்கு விரைவாக தீர்வு சொல்லி விட்டு எழுந்தான். சேக்கிழாரை கண்களால் சைகை செய்ய, அவன் பின்னடியே அவரும் மாளிகையின் உள்ளே சென்றார்.

" என்ன சேக்கிழாரே! ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறதே. அதுவும், அவையைத் தவிர்த்து, தனிமையில்....    ம்ம்ம்...   கூறும்!"

"மன்னா! வெகு நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டு இருக்கிற விஷயம் இது. இந்த விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தே ஆகா வேண்டும். முதன்மந்திரியான என் கடமை இது."

"தயங்கமால் சொல்லும்!"

" தாங்கள் ஜைன காவியமான சீவக சிந்தாமணியில் சிந்தையை இழந்து விட்டுள்ளீர்கள். மனதை காமத்தின் பால் கவரக்கூடிய பல விஷயங்கள் அக்காவியத்தில் உள்ளதை அறிவீர்கள்.

நாட்டின் மன்னர் நீங்களே சிதம்பரனாரையும் சிந்தாமணியையும் ஒரே தராசுவில் வைப்பது , சாமானிய மக்களுக்குத் தவறான செய்தியைச் சொல்கி றது. இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்லக்கூடும். இது நாட்டுக்கு நல்லதல்ல. மக்களுக்கு சரியான சமிஞையைத் தாங்களே தர வேண்டும். இதை அவையடக்கம் கருதி அங்கே சொல்லவில்லை.. "

"சரிதான்..   அதனால்?...."

"மகேசன்பால் உங்கள் மனதை முழுதும் திரும்புமாறு வேண்டுகிறேன். இது உங்களுக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது .அடியார்களின் வரலாற்றைப் படியுங்கள். அது  உங்கள் வாழ்க்கைக்கு நல்ல வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கும் ஆன்மீக ஈடுப்பாட்டை ஏற்படுத்தி அவர்களை சரியான பாதையில் இட்டுச்செல்லும்.

சில நிமிடங்கள் மௌனம்.

சேக்கிழார் மன்னனை தீர்க்கமாய்ப் பார்த்தார். மன்னன் " சபாஷ்! சரியாகச் சொன்னீர், சேக்கிழாரே! வாழ்த்துக்கள்! மந்திரி என்றால் மன்னனை சரியான வழி நடத்திச் செல்ல வேண்டும்.

அம்பலத்தானிடம் உள்ள என் ஈடுபாடு உமக்கு நன்றாய்த் தெரியும். நாளுக்கு நாள் எனக்கும் அவன்பால் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே வருகிறது . சொல்லுங்கள்! எந்த காவியத்தை நான் படிக்க வேண்டும்?"

"மன்னா! சிவனடியார் வரலாறுகள் பலவாறு சிதைந்து கிடக்கின்றன. ஒரே காவியமாக இல்லை. இப்புராணங்கள் உள்ள பல சுவடுகள், தில்லையில் உள்ளன . அவற்றைப்படிக்கலாமே!"

நாட்டின் மன்னன். அதுவும் மிக நன்றாக ஆள்பவன் எனப் பேர் எடுத்தவன். அரசவையினரின் ஆற்றல்கள் எல்லாம் அத்துப்படி. சேக்கிழாரின் தெய்வத்தன்மையும் பேராற்றலும் நன்கு அறிந்தவன் அல்லவா?

" சேக்கிழாரே! உம்மை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்? ஒரு காரியம் செய்யும். எல்லா சிவனடியார்ப் புராணங்களையும் ஒன்றாகத் தொகுத்து நீரே ஏன் ஒரு பெருங்காவியமாகப் படையும். அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். படித்துப் பின்பற்றுவதற்கும் ஏதுவாக இருக்கும்."

இதை எதிர் பார்க்கவில்லை, சேக்கிழார். அரசனை நெறிப்படுத்துவது அவர் கடமைதான். அதற்காகத்தான் அவனை தனியே சந்தித்து அறிவுரையைச் சொன்னார். ஆனால், இந்த வேலையை அவரிடமே ஒப்படைப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதன்மந்திரியாய் இருப்பவருக்கு காவியம் படைப்பதா  வேலை?

சேக்கிழார் பிரமித்தார். எப்பேற்பட்டவர்களைப் பற்றி எழுதச்சொல்லி இருக்கிறான் மன்னன்? "63 நாயன்மார்களின் வரலாற்றை நான் வரைவதா?" இது என்ன சாதாரண காரியமா? ஒரு மனிதனால் இயலுமா? அதுவும் தன்னால்?

 "மன்னா! இது மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட விடயம். இந்த புனித காரியத்துக்கு தேவையான ஆற்றல் என்னிடம் இல்லை!அறியாமை இருளில் இன்னும் நான் உள்ளேன்!"

யார் "என்னால் முடியாது" எனச் சொல்கிறாரோ , அவரால்தான் முடியும் என மன்னனுக்குத் தெரியாதா? "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீர்தான் செய்யவேண்டும்! இது அரசகட்டளை!"  மீற முடியாதே!

" மன்னா! சரி, ஆனால் ஒரு நிபந்தனை. இந்த நூல் எழுதுகிற பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றால், நான் முதன்மந்திரிப் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்!"

அந்த நிமிடமே அவன் கண்ணுக்கு அவர் ஒரு ஞானியாகக் காட்சி அளிக்க, அவர் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளும் விதமாக, அவரை விழுந்து கும்பிட்டான்.

சேக்கிழார் புறப்பட்டார். இந்நூல் பற்றி செய்தி சேகரிக்க எங்கெங்கு செல்வது? யார் யாரைக் கேட்பது?

பார்த்தார். தயங்கவே இல்லை. "இது என் வேலை இல்லை ஈசனின் கட்டளை. அவனே வழு நடத்துவான். இப்பணியை செவ்வனே செய்விப்பான் சிற்றம்பலத்தான்." மனதில் தெளிவு உடனே பிறந்தது

நேராகத்  தில்லை சென்றார்.

"அய்யா! இக்காவியத்தை இயற்றப்போவது நான் இல்லை. இது எனக்கு அப்பாற்பட்டது. இது நீயே இயற்ற வேண்டும். இதற்கு ஏற்ற வார்த்தைகளை நீயே எனக்கு அளிக்க வேண்டும்! இந்தப் பிரபஞ்சத்திலே உள்ள உந்தன் ஓசையை எனக்குள்ளே நீயே புகுத்த வேண்டும்."

நடராஜரைத் தழுவினார். தன்னையே மறந்தார். உலகை மறந்தார். ஊணுறக்கம் துறந்தார். எத்தனை காலம் போனதோ?

தீர்க்கமான ஒரு அசரீரி ..    " உலகெலாம்......  "

ஒரு வார்த்தை .... ஒரே ஒரு வார்த்தை...   சிக்கெனப் பிடித்துக்கொண்டார் .....

"உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்."

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்...

காலத்தைக் கடந்த காவியம், அங்கு  உருவாயிற்று


- D -



















 



No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...