Friday, July 21, 2023

ஒரே காட்சி. இரண்டு கோலங்கள்!

ஒரு இனிய மாலைப் பொழுது. மறையும் ஆதவன். அவனின் பொன்னொளிக் கதிர்கள் முகிலிலும் மாலையிலும் மோதி எங்கும் பரவும் காட்சி. சிதறும் கதிர்களின் இந்தத் தோற்றத்தை  ஒரே கவிஞன் , ஒரே காப்பியத்தில் இரண்டு இடங்களில் வெவ்வேறு வகையில் வர்ணிக்கும் அழகை இங்கு ரசிக்கப் போகின்றோம்.  

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்ப ராமாயணத்தில், பாடல் எண் 632ல் சிவகாமி நேசனாம் நடராஜனின் நர்த்தனத்தை எடுத்துக்காட்டி சூரியனின் கதிர்களுடன் ஒப்பிடும் கம்பன், பாடல் எண் 890ல் , இதே காட்சிக்கு நரசிம்ஹப் பெருமாளை மேற்கோள் காட்டி தன் கவி நயத்தைக் காட்டிடும்  அற்புதத்தைக் காண்போம்.

தமிழ் இலக்கணத்தில் இதனை "உவமையணி" என்பர். அதாவது, புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.


முதலில் பாடல் 632. இதோ!


‘எண்ணரிய மறையினொடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த

விண்ணவரும் முனிவர்களும் வேதியருங் கரங்குவிப்ப வேலை என்னும்

மண்ணுமணி முழவதிர வானரங்கில் நடம்புரிவா னிரவி யான

கண்ணுதல்வா னவன்கனகச் சடைவிரிந்தா லெனவிரிந்த கதிர்க ளெல்லாம்.’ (632)


எனக்குப் புரிந்த வரையில் இதன் பொருளாவது:

"ஆதி அந்தம் இல்லாத வேதப் பாடல்களோடு கின்னரர்கள் இசைப்பாட...   இந்தப் பாடலுக்கு ஒரு இசை வேண்டாமா? அவ்விசையை வேலை (கடல்) எனும் மார்ச்சனை பூசிய அழகிய மத்தளம் முழங்க, விண்ணவர்( தேவர்கள்) மற்றும் முனிவர்களும் அந்தணர்களும் காய் கூப்பி வணங்கிட .. இந்த தெய்வீக இசைக்கு ஏற்ப, வானமாகிய நடன சபையிலே நடனம் ஆடுகின்ற  வாள் (ஒளி) பொருந்திய சூரியனாகிய, நெருப்புக்  கண்ணை  நெற்றியிலே உடைய  உருத்திர  மூர்த்தியின் (சிவனின்) பொன்னிறமான சடைகள் விரிந்தது போல ஒளிக் கதிர்கள் யாவும் எங்கும் பரவின". சூரியனின் விரிந்த கதிர்களை நடராஜனின் விரிந்த சடையுடன் ஒப்போயிடுகிறான்!

இங்கு, மார்ச்சனை என்பது மத்தளத்துக்கு மேலே பூசப்படும் வெள்ளை நிரப் பசை. இந்தப்பசையினால் மத்தளத் தோல் கெட்டிப்படும். அதனால் சத்தம் "கணீர்" என உறைக்கும். கடலின் வெண் நுரையை  கம்பர் இங்கே மார்ச்சனத்துடன் ஒப்பிடுகிறார். 

இந்த நான்கு வரிகளில் சிவனின் cosmic dance ஐ கண் முன் நிறுத்துகிறான் கம்ப நாடன் !  


இப்போது பாடல் 890.


மீனுடை எயிற்றுக் கங்குல் - கனகனை வெகுண்டு; வெய்ய

கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி.

தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று.

மானுட மடங்கல் என்ன தோன்றினன். - வயங்கு வெய்யோன்.  (890) 


மீனுடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு- விண்மீன்களைப் பற்களாகக்  கொண்ட  இரவாகிய இரணியனைச்  சினந்து; வெய்ய கான் உடைக்  கதிர்கள்  என்னும் - வெப்பம் உடைய செறிந்த கிரணங்கள் என்கின்ற;  ஆயிரம்  கரங்கள் ஓச்சி - ஆயிரம் கைகளை வீசி; தான் உடை  உதயம்  என்னும்  -  தான் தோன்றுதற்கு இடமான உதயகிரி என்கின்ற; தமனியத்  தறியுள் நின்று - தங்கத் தூணிலிருந்து; மானுட மடங்கல் என்ன - நரசிங்கப் பெருமாள் (தோன்றியது) போல; வயங்கு வெய்யோன்   தோன்றினன்   -   ஒளியுமிழ்ந்தவண்ணம்   கதிரவன உதித்தான்.


எனக்குப் புரிந்த வரையில் இதன் பொருளாவது:

 நட்சத்திரங்களை பற்களாகக்  கொண்ட  இரவாகிய இரணியன் மேல் கோபம் கொண்டு, தான் தோன்றுதற்கு இடமான உதயகிரி (மலை) என்கின்ற தங்கத் தூணிலிருந்து, சுடும் கதிர்களாம் ஆயிரம் கரங்களை வீசி அவனை அழிக்கப் புறப்பட்ட நரசிம்ஹனை போல ஒளி கொடுத்த வண்ணம் ஆதவன் உதித்தான். 

காலைக் கதிர்கள் மலை மேல் போன் நிறத்தில் தெறித்து, அம்மலையை ஒரு தங்கத் தூண் போல தெரியச் செய்ததாம் ! 


கம்ப நயம் தான் என்னே!!





             

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...