காலைத் தூய்மை தம்மைத் தானே மெதுவாக விரித்துக் கொண்டிருந்தது. ஹஸ்தினாபுரத்தின் மேற்கு வாயிலில், அந்த பரபரப்பான நகரம் அந்த நாள் மட்டும் ஒரு விதைபோல் சும்மா இருந்தது..
அங்கு அருளே கால் முளைத்து அரணில் இருந்து வெளிப்பட்டது. மெதுவாக அரண்மனையை நோக்கி நடந்தது.
பிரம்மாவின் மூலமந்திரமே உருவாய்ப் பிறந்தவர். வியாசர். அவரது நடை – காலமெனும் நதிக்கு எதிராக ஓடும் வேர்களின் மென்மை.
பறவைகள் சத்தமிடவில்லை. வேறு எந்த நுட்பமான ஓசையும் இல்லாமல். அவரது காலடி மட்டுமே நகரத்தின் நரம்புகளில் இசையாக ஒலித்தது.
அவர் மெல்ல நகரத்திற்குள் நடந்துசெல்லத் தொடங்கினார்.
விசித்திரமான அமைதியுடன். அரண்மனைக்கே உரிய மண், அவருடைய காலடி தடங்களில் வணங்கியது.
அவர் நடக்கும் பாதையில் தூவப்பட்டிருந்தது – குங்குமம், மஞ்சள், சந்தனம், பன்னீர்.
சுவரில் தொங்கிக் கிடந்த வெற்றிலைக் கொடிகள் கூட உறைந்து நின்றன, அவர் கடந்து செல்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு.
அவர் நகரமுழுதும் செல்லும் வழியில், பிள்ளைகள் கூட ஓடாமல் நின்றனர். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொண்டையை இறுக்கத் தொடங்கினர். மூதாதையர்களின் கண்கள் – “இந்த தருணம் ஒரு யுகத்திற்குப் பிறகு மட்டுமே ஏற்படும்” என்று சொன்னது.
நகரமே ஒரு பீடமாய் அவர் அதன் மேலுள்ள பிரதிஷ்டையாய்க் காட்சி அளித்தார்.
நகரத்தின் தூய்மைப் படைகள், கவசம் அணிந்த காவலர்கள், அவரை நோக்கி கைகூப்பினர். நகரப் பாதையில்அவரே ஒரு யாக குண்டம் போல, அருள் நெருப்புடன் வந்துகொண்டிருந்தார்.
ஜனமேஜயன் – ஒரு ரதம் சக்கரம் போல, அரண்மனையின் வாசலில் காத்திருந்தான். தாமரை, சந்தனம், பன்னீர், அர்ச்சனை பொருட்கள் – அனைத்தும் அவனுடைய கைப்பிடியில்.
அவன், தனது சிம்மாசனத்தை விட்டுத் தாழ்ந்து நின்றான்.
“பகவனே! எங்கள் ஊருக்கு இன்று ஒரு யுகம் பிறந்துவிட்டது. உமது காலடி எங்கள் மண்ணில் பதிந்ததே, அதுவே புண்ணியம். உமக்கென இந்த அரண்மனையில் அனைத்தும் தயாராக இருக்கின்றது. இங்கு வேண்டியதெல்லாம் உமக்கு அமையட்டும். உம்மை மகிழ்விக்க முடிந்ததுதான் என் குலத்துக்கான கௌரவம்.”
வியாசர் மெதுவாக நகர்ந்தார். மென்மையாய்ச் சிரித்தார். அந்த சிரிப்பில் – சங்கல்பம் இருந்தது. துறவியம் இருந்தது. வரம் இருந்தது.
“மஹாமுனிவரே! பரமபுருஷரே! உங்கள் காலடி தூசு எங்கள் குலத்துக்குப் புனிதம்!”
வியாசர், தமது கருணை பார்வையுடன் சிரித்தார்.அவர் வார்த்தை பேசவில்லை. அங்கு அவரின் பார்வையே ஆசீர்வாதம் ஆனது.
அவருக்காகவே வடிவமைக்கப்பட்டிருந்த அரண்மனையின் பவள மண்டபம் – மூன்றடி உயரம் கொண்ட தாமரைக் குளம் நடுவில்.
அதில் தவமிருக்கும் குமிழிகள் போலவே, வியாசருக்கென உருவாக்கப்பட்ட ஒரு பாறைக் கல்லாசனம்.
பாதம் கழுவப்பட்டன. பசும்பாலில், சந்தனத்தில், துளசி தீர்த்தத்தில்.
அனுசரணையில் 16 விதமான சாற்றுகள், 32 வித சமர்ப்பணங்கள்.
ஜனமேஜயன் தனக்கென இருந்த சிம்மாசனத்தை விட்டு, தரையில் அமர்ந்தான். அரசன் என்பவன் அங்கே – ஓர் அதிதியை உபசரிக்கின்ற ஒரு பூசாரி.
“உமக்கு ஏது வேண்டுமோ – அது இங்கு இருக்கும். ஒரு நூற்றாண்டு இங்கு தங்கினாலும், உணவு, நிவாரணம், பூசை, வேத நூல்கள் – எதிலும் குறையாது.”
“ஜனமேஜயா… உனது வரவேற்பு – ஒரு யாகத்தின் பூர்ணாஹூதி போலிருக்கிறது. உன் குலம் ஒரு நாள் விழுந்தாலும், உனது நீதி உணர்வு விழவில்லை. அதுவே உன்னை காக்கும்.”
ஜனமேஜயன் நெகிழ்ந்தான்.
வியாசர் உணர்ந்தார் – அவன் புகழைப் பெறும் அரசனாக அல்ல, அவரிடம் அங்கீகாரம் பெற்ற மாணவனாக அவன் வாழ விரும்புகிறான்.
ஜனமேஜயன் - ஹஸ்தினாபுர சக்ரவர்த்தி - வியாச மகரிஷியின் வரலாற்றுப் பதிவை நன்றாக அறிந்து இருந்தவன்.
ஆனால் அவன் மனதில் ஏனோ ஒரு நெருடல்.
வியாசர் நாட்டின் நலன், மற்றும் மக்களின் நலன் பற்றி விசாரித்தார். பல நற்க்கருத்துக்களைப் பகிந்தார்.
பின் ஜனமேஜயன் மெதுவாக ஆரம்பித்தான்.
“பகவனே... ஒரு கேள்வி."
"கேள், மன்னவனே!"
"தாங்கள் கடந்த-நிகழ்-எதிர் காலங்களை பார்வையால் கண்டவர். அப்படி இருக்க, யுதிஷ்டிரன் சூதாட்டம் விளையாடுவதைத் தடுக்கத் தாங்கள் ஏன் முயற்சிக்கவில்லை?”
வியாசர், மெதுவாக சிரித்தார். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை.
ஜனமேஜயன் நிமிர்ந்தான்.
“ஓர் அரசன் ஆகமொன்றை மீறினால், தாங்கள் வாய்வழி நின்று பார்த்தீர்கள். அந்தச் சூதாட்டம் இல்லையெனில் யுத்தமே இல்லையாயிற்றே. ஏன்—தாங்கள் மௌனமாக இருந்தீர்கள்?”
இப்போது வியாசர் விழிகளில் கொஞ்சம் தீவிரம். ஆனாலும் வாயோரம் கொஞ்சம் புன்னகை.
“ஊழை நீ தடுக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா, ஜனமேஜயா?”
“நான் ஒரு சக்ரவர்த்தி! என் கட்டளையால் நாடு நடக்கிறது.”
வியாசர் நெருங்கி வந்தார். இப்போது சிரிப்பு இல்லை.
நடுவான குரல் – தீயின் எச்சரிக்கை.
“பத்து நாளில், ஒரு அந்தணன் – உன்னால் சுடப்பட்டு இறக்கப் போகிறான். அதையும் தடுத்துப் பார். பிறகு யுத்தத்தை தடுக்க முடியுமா என்று நீயே தீர்மானித்துக் கொள்ளலாம்.”
...என்றவுடன் அவர் மறைந்தார்.
அரசன் ஸ்தம்பித்தான்.
அடுத்த நாளே, ஜனமேஜயன் பிரம்மஹத்தி தோஷத்தைத் தவிர்க்க, மாபெரும் யாகம் நடத்தத் தீர்மானித்தான். நூற்றுக்கணக்கான பிராமணர்கள் வரவழைக்கப்பட்டனர். மூலிகை வாசனைகள், வேத மந்திரங்கள், பல்லவிசைகள் – கோரமான ஒளிவட்டமாக மாறியது.
வேள்வி விதிப்படி அது பத்து நாள்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்குள் வேள்வி நடத்தும் அந்தணர் ஒருவரும் ஒரு நிமிடம் கூட தூங்காது விரதமிருந்து அந்த வேள்வியை வெற்றிகரமாக முடித்திட வேண்டும்.
அவர்களில் ஒருவர் – ஒரு நெற்றி சுருங்கிய, வயதான அந்தணர். தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. ஆனாலும் வேதத்தில் பரம நிபுணர்.
வேள்வி தொடங்கி ஒன்பதாவது நாள் வெற்றிகரமாக முடிந்தது. ஜனமேஜயன் – பூரண நம்பிக்கையுடன்: “நான் வியாசரை வீழ்த்தியவனாக வரலாற்றில் எழுதப்படப்போகிறேன்.”
பத்தாவது நாள். மாலை.
சூரியன் மேற்கில் விழு எத்தனிக்கும் நேரம்.
இப்போது – மகா வேள்வியின் கடைசி பத்து நிமிடங்கள்! அந்த நேரத்தில்...
வயதான அந்த அந்தணர்…
தலையை சாய்த்தார். கண்கள் சுருண்டன.
அவர் அசதியினால் சற்றே தூங்கத் தொடங்கினார்.
ஜனமேஜயன் – பதற்றம்.
“ஐயா! விழிக்க வேண்டும்... விழிக்க வேண்டும்!”
தலையை அசைக்க, உடல் பதறவில்லை.
அவசரத்தில், அவர் பக்கத்தில் இருந்த தர்பை புல் ஒன்றை எடுத்தான்.
அதை மெதுவாக அவரது முதுகில் எழுப்பும் பொருட்டுத் தீண்டினான்.
அந்த நொடி –
“அய்யோ!!” – ஒரு பயங்கர சத்தம். என்ன நடந்ததோ தெரியவில்லை.
அந்தணர் திடீரென விழித்தார். குபீரென்று யாக குண்டத்தில் குதித்தார். கருகினார். சாம்பலானார்.
ஒரே நொடியில் அந்த வேள்வித்தீ மயானத் தீ ஆகியது.
பர்ணசாலை எங்கும் மௌனம்.
அந்த “அய்யோ!” ஒரு அந்தணரின் இறுதி சத்தம் மட்டுமல்ல. ஊழ் என்னும் சக்தி தன்னுடைய உரிமையை எடுத்துக்கொண்ட சத்தம்.
மந்திரிகள் பதைபதைத்தனர். ஜனமேஜயன் – அழுதான்.
அப்போது – மறுபடியும் வந்தார் வியாசர். தாமரையின் மேலிருந்து இறங்கும் பனி போல.
“பகவனே… நான் ஒருபாவம் செய்யவில்லை… யாகத்தை நிறைவு செய்ய முயன்றேன்…அவ்வளவேதான்…பின் ஏன் இந்தப் பாவம் எனக்கு?”
வியாசர் – தீர்க்கமாக ஜனமேஜயனைப் பார்த்து
“மகனே! அந்த அந்தணர்க்கு சிறு வயது முதலே புலி துரத்துவது போல அடிக்கடி கனவு வருவதுண்டு. பாயப்போகும் சமயம் விழித்துவிடுவது வழக்கம் . ஆனால் இன்று – அவர் உன் கையால் மரணிக்க வேண்டும் என்பது விதி. அதனால்தான் இன்று அவர் விழிக்கவில்லை.
இன்றும் அரைத்த தூக்கத்தில் அதே கனவு. புலி துரத்தியது. அவரை அடைக்க அவர் மேல் பாய்ந்து கையை ஓங்கும் பொது தட்ட நீ அவரை தர்பையால் தொட்டாய். அவர் நினைத்தார் – புலி அடித்து விட்டது என்று . அதன் பின்னர் யாவும் – நீ பார்த்ததுதான்.”
ஜனமேஜயன் வீழ்ந்தான். வியாசர் மறைந்தார்.
மனிதனின் அகந்தையை விழுங்கும் ஒரு தருணம் அது. விதி வலியது என பறை சாற்றும் தருணம் அது.
================================
திருவள்ளுவர் சொல்வது:
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். ."
ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!