Thursday, September 25, 2025

நாரைகள்

சிற்றாறின் கரையில் அடர்ந்த நெற்காடுகள் பசுமையோடு சலசலத்தன . மார்கழி மாதக் காற்றில் வானம் நீலமாய் கண்ணில் ஒளிந்தது. இக்கிராமம் மிகத்தொன்மையாய் இருந்தாலும் சிதைவு அதிகம் இல்லை.

அந்த எல்லைப்புறக் கிராமத்தில் யாருமே பேசாமல் அமைதியாக நடந்தனர். கிழவர்கள் கூட புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கண்களைத் தாழ்த்தி நடந்தனர். குழந்தைகள் கூட பக்கவழி எடுத்து ஓடினார்கள். முகத்தில் பயத்தின் சாயம் மட்டும். படை வீரன் என்றால் அப்படி ஒரு மரியாதை! பரிதி சில காலம் எல்லையைக் காக்க வேறு ஊரில் இருந்து விட்டு இன்றைக்குத்தான் ஊர்த் திரும்புகிறான்.

பரிதியின் மனம் பின் நோக்கிப் போனது.   சிறுவயதில் விளையாடிய மலைக்குப் பின் உள்ள முந்திரிக்காடு சென்றான். ஒரு மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, அவன் மனதில் பழைய சத்தம் கேட்டது –

“அடேய்க் கிராதகா! என் மரத்தில் ஏறுகிறாயா?” என்று ஒருகாலத்தில் கூவி கைத்தடியுடன் விரட்டிய பழைய கிழவன்.

அந்த கிழவன் இன்று இல்லை. அவன் கண்கள் வானத்தில் நிலைத்து, பனித்துளியுடன் ஒளிந்து கொண்டன. 

காலப்போக்கில், கிராமத்தின் மையத்தில் இருந்த பழைய மனை ஒன்று “அமைதிப் படை அலுவலகம்” ஆனது. இன்றிலிருந்து பரிதி தான் அதன் தலைமை அதிகாரி. 

அந்த அலுவலகத்தில் இன்று அவன் முன்  கைகளை கட்டப்பட்டு நின்றவன் – அவனது சிறுவயதுக் கூட்டாளி,  நந்திவர்மன். வந்தும் வராததுமாய் பரிதிக்குச் சோதனை. 

பரிதி அதிர்ச்சியடைந்தான்.  காவலரிடம், “இவனை நான் கூட்டிச் செல்வேன்” என்றான்.

அவர்கள் இருவரும் கிராமத்தை விட்டு நடக்கத் தொடங்கினர். நடந்துக்கொண்டு இருந்த  பரிதி மனதில் மட்டும் பழைய நினைவுகள் வந்தன 

சிறுவயதில் இருவரும் சேர்ந்து ஆற்றுப் படுகையில் மணல் வீடு கட்டியது.  

ஒரு முறை இருவரும் சேர்ந்து அக்கிராமக் கிழவனின் முந்திரியை திருடப் போனார்கள். மரத்தில் ஏறியது பரிதி. கிழவன் கத்த, அவன் சறுக்கி விழுந்தான். அடியில் விழுந்தபோது முட்கள் உடம்பைத் தைத்தன. வலியில் கண்ணீர் வந்தது. அப்போது நந்திவர்மன் தனது கையில் இருந்த முந்திரிகளை அவனுக்குக் கொடுத்தான். வலியைப் பகிர முடியாது. முந்திரியைப் பகிரலாமே!

இன்று அந்த நாள்கள் தொலைவில் போய் விட்டன.

வழி சாய்ந்தது. பசுமை வயல்கள். அந்த நிலங்களில் தான் ஒருகாலத்தில் இருவரும் சேர்ந்து பசுக்களுக்கு தீவனம் வெட்டினார்கள்.

திடீரென்று பரிதி  சத்தமாகக் கேட்டான் –

“சொல் பா, எத்தனை பேரை கொன்றிருக்கிறாய்?”

நந்திவர்மன் சற்றுக் கண்களை உயர்த்திப் பார்த்து விட்டு, மீண்டும் தலைத் தாழ்த்தினான்.

“நீ எத்தனை பேரை கொன்றாய்?” என்று எதிர்பாராமல் நந்திவர்மன் எதிர்க் கேள்வி விட்டான்.

அந்த பார்வையில் கோபம், வலி, விரக்தி அனைத்தும் இருந்தது. பின்னர் அமைதியாகச் சொன்னான்:

“எனக்குத் தெரிந்த ஒரே தொழில் நிலத்தை உழுவது. மழைப் பொய்த்தது. பல வருடமாய். வாச வேறு வழியில்லை. என்னை போறாளித் தலைவனாக்கினார்கள், ஏனென்றால் நான் ஏழை விவசாயி. வாழ வழி இல்லை. இழக்க இனி ஏதும் இல்ல. என் செயல்களுக்காக  மரணம் வந்தால் கூட நான் தயார்.”

சற்று நின்று, மெதுவாகத் தொடர்ந்தான்:

“என் தந்தை அரை ஆண்டாக படுக்கையில். அவரைத் பார்க்க கூட முடியவில்லை.”

பரிதி மனதில் தன் தந்தையின் குரலும் எழுந்தது –

“விவசாயி நிலத்தை விட்டுத் போவது எப்படி சாத்தியம்? நெல்லும், களையும், உழுத நிலமும் எல்லாம் உயிரோடு விட்டுவிட்டு போக யாருக்குத்தான் மனம் வரும்?!”

“திருமணம் ஆகி விட்டதா?” 

“ஆமாம்” என்றான் நந்திவர்மன்.

“யாருடன்?”

“அந்தச் சிறிய சித்திரக் கண்ணம்மா.”

சிரிப்பு தடுக்க முடியவில்லை பரிதிக்கு. ஒருகாலத்தில் இருவரும் அவளை எரிச்சலூட்டிக் கண்ணீர் விடவைத்தார்கள். இப்போது அவனே அவளை மணந்து குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பாதையை விட்டு விலகும் போது வயலில் வெள்ளையன சோலை பறவைகள் கூட்டமாகக் குதித்து பறந்தன. அவை அன்னங்கள்.

அந்தக் காட்சி இருவருக்கும் பழைய நினைவுகளை எழுப்பியது.

பன்னிரண்டு வயதில் அவர்கள் ஒரு நாரையைச் சிக்கவைத்து கயிற்றால் கட்டினர். தினமும் அதனுடன் விளையாடினர். பிறகு ஒருநாள் யாரோ வேட்டையாடப் போவதாகக் கேட்டதும், இருவரும் ஓடிச் சென்று நாரையின் கயிற்றை அவிழ்த்தனர். பறவை முதலில் நிலத்தில் தடுமாறியது. ஆனால் சிறிது நேரத்தில் பறந்து வானில் மறைந்தது. நீண்ட நேரம் அவர்கள் வானத்தை நோக்கி நின்றிருந்தனர், நாரையின் புத்துயிரைப் பார்த்தபடியே.

இப்போது அந்த வயலில் நாரைகள் பறந்தன.

பரிதி திடீரென்று சொன்னான்:

“இங்கேயே ஒரு நாரை வேட்டை போடலாமா?”

அவன் நந்திவர்மனின் கைகளை அவிழ்த்து, “நீ பறவையை விரட்டிப் போடு. நான் கயிற்றால் பிடிக்கிறேன்” என்றான்.

நந்திவர்மன் குழப்பமடைந்தான்.  மனம் அளைந்தது. 

“இவன் என்னை இங்கேயே கொல்வானோ?” 

"என்ன இருந்தாலும் என் நண்பன், என் மீது கட்டாயம் இரக்கம் காட்டுவான்!"

"இன்று அவனொரு அரசு அதிகாரி. அவன் கடமையைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான்!"

" இப்பொழுதே என் கதையை முடிப்பானோ?"

"எங்கோ போய்ப் பிழைத்துக்கொள். இந்த எல்லைக்குள் இருக்காதே!" 

"மன்னவன் கொற்றம் முக்கியமா. இல்லை, மனிதாபிமானம் தான் முக்கியமா?"

இருவரும் சிரமத்துடன் களையின் நடுவே ஊர்ந்து சென்றனர். திடீரென்று, நாரைகள் சில, பெரிய சிறகுகளை விரித்து நீல வானில் பறந்து சென்றன. அந்த நொடியில், நந்தி வர்மன் கண் முன் அன்று அவனும் பரிதியுமாகச் சேர்ந்து கட்டிய நாரைகளை விடுவித்த காட்சி கண் முன்னே வந்து போனது. "அன்று அந்த அன்னங்களுக்கு  ஆனதுதான் இன்று எனக்கும் ஆகுமோ"?

நீண்ட நேரம் அவர்கள் கண்களிலிருந்து அந்தப் பறவைகள் வெகு நேரம் மறையவில்லை.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...