ஊர்: மண்டபம்.
இந்தியாவின் முக்கிய நிலப்பரப்பிலிருந்து கிழக்கு நோக்கி நீண்டுசெல்லும் ஒரு குறுகிய நிலப்பகுதி. படிப்படியாகக் குறுகி, ஒரு முனையாக முடிவடையும் அந்தப் பகுதியில் அமைந்திருந்த ஊர் — மண்டபம். பாஸ்கர சேதுபதியின் பிரதேசம்.
வருடம்: 1961
இந்தியாவில் தடுப்பூசிகள் இன்னும் பரவலாகக் கிடைக்காத காலம். குறிப்பாக, DPT Triple Antigen தடுப்பூசி பல இடங்களை இன்னும் சென்றடையாத காலம்.
இடம்: வீடு
“இங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்கோளேன்! ஜெயந்தி மூச்சு விட ரொம்பக் கஷ்டப்படறா!” செய்தி சொல்லி அனுப்பி இருந்தாள்.
ஒன்றரை வயதே ஆன தன் மகளை மடியில் குப்புறக் கிடத்தி, ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள். முகம் முழுவதும் கவலையின் ரேகைகள். ஆனால், தன் மனதில் இருப்பதை உரக்கச் சொல்லக்கூடத் தெரியாதவள் அவள். ‘அப்பாவி’ என்ற வார்த்தைக்குக் கை, கால் முளைத்தால், அது அவளாகத்தான் இருக்கும்.
அப்பா அவசர அவசரமாக ட்யூட்டியை விட்டுவிட்டு வந்து பார்த்தார். உடனே மதுரைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். சுமார் 150 கிலோமீட்டர் பயணம். அதுவும் டாக்சியில். ஆனால், கையிலோ சல்லிக் காசுகூட இல்லை! டாக்சிச் செலவு, மதுரையில் மருத்துவச் செலவு... என்ன செய்வது?
“உன் மோதிரம் கொஞ்சம் குடு. அப்புறம் மீட்டுக்கலாம்.”
கழற்றிக் கொடுத்தாள். எந்தக் கேள்வியும் இல்லை. எந்தத் தயக்கமும் இல்லை.
மோதிரம் மார்வாடிக் கடையில். டாக்சி வீட்டு வாசலில்.
மூன்று உயிர்கள் மதுரையை நோக்கிப் பயணித்தன. திரும்பி வந்தது - இரண்டு உயிர்கள் மட்டுமே.
“இன்னும் ஒரு நாலு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா, கண்டிப்பா ஏதாவது பண்ணியிருக்கலாம். Diptheria ரொம்ப advance ஆயிடுத்து! இப்படி லேட் பண்ணிட்டீங்களே!”
அந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவைப்பட்டிருக்கக்கூடிய நான்கு மணி நேரம். அந்த நான்கு மணி நேரத்தை வாங்க முடியாமல் போனதற்குக் காரணம், கையில் இல்லாத பணம்.
ஜெயந்தியின் உயிரின் விலை — ஒரு டாக்சியின் வாடகை: 40 ரூபாய். (1961)
நாற்பது ரூபாய்! ஒரு தாயின் மடியிலிருந்து அவளுடைய குழந்தையைப் பிரித்தெடுத்த நாற்பது ரூபாய்!
டிப்தீரியா என்ற கொடிய நோய்க்கு எதிரான தடுப்பூசி அவளைச் சென்றடைந்திருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்குமோ? நமக்குத் தெரியாது. ஆனால், தன் குழந்தையை இன்னும் நான்கு மணி நேரம் முன்னதாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்ற மருத்துவரின் வார்த்தைகள், அந்தத் தாயின் நெஞ்சில் எத்தனை ஆண்டுகள் எதிரொலித்திருக்கும்?
அன்று அவளுடைய மடியிலிருந்து பிரிந்தது ஒன்றரை வயதுக் குழந்தை மட்டுமல்ல. அவள் தன் குழந்தையுடன் கற்பனை செய்திருந்த எதிர்காலமும், அவளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவும், இன்னும் எத்தனையோ சொல்லப்படாத ஆசைகளும்கூட அந்த நாற்பது ரூபாயுடன் எரிந்து போயின.
ஆனால், அவளுடைய தாய்மை மட்டும் அங்கேயே நின்றுவிடவில்லை.
காலம் உருண்டது. அவளின் கண்பார்வை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே பறிபோயிருந்தது. பின்னர், கணவனையும் இழந்தாள். பக்கவாதம் அவளுடைய நடமாட்டத்தையும் பறித்துக்கொண்டது. வாழ்க்கை அவளிடமிருந்து ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டே போனது.
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் படுக்கையிலேயே கிடந்தாள். முதுகில் அரித்தால்கூடத் தானாகக் கையை எடுத்துச் சொறிந்துகொள்ள முடியாது. யாராவது வந்து உதவ வேண்டும். ஒரே படுக்கை. ஒரே பொசிஷன். பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாது. டீவீயைக் கேட்கத்தான் முடியும். பார்க்க முடியாது. உலகம் ஏற்கெனவே அவளுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இருண்டுவிட்டிருந்தது; இப்போது, அவளுடைய சொந்த உடலே அவளுக்குச் சிறையாகிவிட்டது.
ஆனால், அவளுக்குள் ஓர் உலகம் இருந்தது. அதில் இழந்துபோன கணவன் இருந்தான். என்றும் மறக்க முடியாத மகள் ஜெயந்தி இருந்தாள். அந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் முகம் அவள் நினைவில் எப்படி இருந்திருக்கும்? அவளுடைய குரல் நினைவுக்கு வந்திருக்குமா? தன் மடியில் கிடந்த அந்தச் சின்னஞ்சிறு உடலின் கதகதப்பை நினைத்துப் பார்த்திருப்பாளா? ஒருமுறை மட்டும், இன்னும் ஒரே ஒரு முறை மட்டும், தன் மகளைத் தொட்டுப் பார்க்க முடிந்தால் போதும் என்று ஏங்கியிருப்பாளா?
அவளால் உலகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவள் இழந்த உலகத்தை மறக்கவும் முடியவில்லை.
அந்த எட்டு ஆண்டுகளில் பெரும்பாலான காலம் அவளுக்குத் துணையாக இருந்தது நான். நானே லுகேமியாவிலிருந்து மீண்டு வந்தவன். என்னுடைய உடலுக்கும் மனதுக்கும் சோதனைகள் இருந்தன. ஆனாலும், அம்மாவைக் கவனித்துக்கொண்டேன். அவளுடைய தேவைகளுக்காக ஓடினேன். அவளுடைய அழைப்புக்காகக் காத்திருந்தேன். இதைச் சொல்வது நான் செய்ததைப் பெரிதுபடுத்துவதற்காக அல்ல. அந்த எட்டு ஆண்டுகளில், அவளுடைய வாழ்க்கை எவ்வளவு சிறிய வட்டத்திற்குள் சுருங்கியிருந்தது என்பதைச் சொல்லத்தான். அவளுக்கு வேண்டியதெல்லாம் சில சமயங்களில் ஒரு உதவி, சில சமயங்களில் ஒரு குரல், சில சமயங்களில் அருகில் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு.
அவளுடைய படுக்கைக்கு அருகில் ஒரு காலிங் பெல் வைத்திருந்தேன். பல இரவுகளில், குறிப்பாக இரவு இரண்டு மணியளவில், அந்தப் பெல் ஒலிக்கும். ஓடிப்போவேன்.
“டீவீயைப் போடு” என்பாள்.
“அம்மா! ராத்திரி இரண்டு மணி. இப்போ எதுக்கும்மா டீவீ? பேசாமப் படுத்துத் தூங்கு!”
தூக்கம் கெட்ட கோபத்தில் அதிற்றி விடுவேன். அவள் மெதுவாகச் சொல்வாள்: “சாரிடா! இப்போ ராத்திரின்னு எனக்குக் கண் தெரியல. உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்! போய்த் தூங்கு, பார்த்துக்கலாம்!”
அந்த வார்த்தைகள் என்னை உள்ளுக்குள் உடைத்துவிடும். அவளுக்குப் பகல் எது? இரவு எது? வெளிச்சம் எது? இருட்டு எது? இத்தனை ஆண்டுகளாக உலகத்தைப் பார்க்க முடியாத அவளுக்கு, நேரம் தெரியாமல் போனது அவள் குற்றமா? என்னைத் தொந்தரவு செய்துவிட்டதாக அவளே என்னிடம் மன்னிப்புக் கேட்டாளே!
இரவுகள் அவளுக்கு எவ்வளவு நீண்டதாக இருந்திருக்கும்? நினைவுகள் வந்து சூழ்ந்திருக்குமா? தூக்கம் வராமல், பேசுவதற்கு யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியிருக்கும். தன் தேவைக்காக ஒருவரை அழைக்கும்போதுகூட, அவருடைய தூக்கத்தைக் கெடுத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வுடன் வாழ வேண்டிய நிலை எவ்வளவு கொடுமையானது!
பல நேரங்களில் எனக்குத் தோன்றும் – "அவள் தன்னால் இன்னும் சாக முடியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிருடன் இருக்கின்றாளோ?"
அவளுடைய வலியை நினைக்கும்போதெல்லாம், அவளுடைய மன்னிப்புதான் என் மனதை அதிகமாக வதைக்கும். உதவி தேவைப்பட்டதற்காகவே மன்னிப்புக் கேட்ட அந்தத் தாயின் மனதில், தன் இருப்பே பிறருக்குச் சுமையாகிவிடுமோ என்ற பயம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது!
அவளுடைய கட்டிலுக்குப் பக்கத்துச் சுவரில், அவளுடைய கைக்கு எட்டும் தூரத்தில் சுவாமிப் படங்களை மாட்டி வைத்திருந்தேன். எப்போதெல்லாம் மனம் சரியில்லாமல் போகிறதோ, அப்போதெல்லாம் மெதுவாகக் கையை நீட்டி ஒவ்வொரு படமாகத் தடவிப் பார்ப்பாள். அந்த விரல்கள் வெறும் படங்களை மட்டும் தடவவில்லை. உலகமே தன்னைவிட்டு விலகிப்போனது போன்ற உணர்வில், ஏதோ ஒரு பிடிப்பைத் தேடின.
“உன்னையல்லால் வேறு கதி இல்லை!”
அவளுடைய விரல்கள் மௌனமாகச் சொல்லியிருக்கக்கூடிய பிரார்த்தனை அது.
ஜெயந்தி இறந்து அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தாலும், அந்தத் தாய் தன் மகளின் படத்தைச் சுவாமிப் படங்களுடன் சேர்த்து மாட்டி வைத்திருந்தாள். கடைசிக் காலங்களில் ஜெயந்தியின் படத்தை அடிக்கடி தடவிப் பார்த்துக்கொள்வாள். அவளுடைய விரல்கள் அந்தப் படத்தின் மீது எவ்வளவு நேரம் தங்கியிருந்திருக்கும்! அந்தத் தொடுதலில் எவ்வளவு ஏக்கம் இருந்திருக்கும்! அந்தப் படத்தைத் தடவும்போது, தன் மகளின் முகத்தை மனக்கண்ணில் பார்த்திருப்பாளா? தன் மடியில் மீண்டும் குழந்தையாக அவள் வந்து படுத்துக்கொள்வதுபோல் கற்பனை செய்திருப்பாளா?
இத்தனை ஆண்டுகள் கடந்தும், உலகம் எவ்வளவோ மாறியும், அவளுக்குள் அந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் தாய் இன்னும் உயிரோடு இருந்தாள். வயது முதிர்ந்திருக்கலாம். உடல் தளர்ந்திருக்கலாம். பார்வை போயிருக்கலாம். நடமாட்டம் நின்றிருக்கலாம். ஆனால், தன் குழந்தையை இழந்த அந்தத் தாயின் மனம் மட்டும் அந்த நாளிலிருந்து ஒருபோதும் வயதாகவே இல்லை.
அவள் தன் மனப் பாரத்தை யாரிடமும் இறக்கி வைக்கவில்லை. ஆண்டவனே கதி என்று வாழ்ந்தாள். தன் துயரங்களைப் பிறரிடம் சொல்லி ஆறுதல் தேடுவதற்குக்கூட அவளுக்குப் பழக்கம் இல்லை. ஒரு சிறிய புன்னகை. ஒரு மௌனம். அவ்வளவுதான்.
அடிக்கடி என்னிடம் சொல்வாள்: “நீயே ப்ளட் கான்சர்லேர்ந்து பிழைச்சு வந்து இவ்வளவு கஷ்டப்படற. உனக்கு நான் பாரமா இருக்க விரும்பலடா. ஏதாவது ஒரு ஓல்டு ஏஜ் ஹோம்ல என்னைச் சேர்த்துவிட்டுடு!”
அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்தது என்ன? தனிமையில் வாழ வேண்டிய பயமா? தன் உடல் தன்னையே கைவிட்டுவிட்ட வேதனையா? அல்லது, தன் மகனுக்குத் தானே ஒரு பாரமாகிவிடுவோமோ என்ற கவலையா? ஒருவேளை இவை எல்லாமுமாக இருந்திருக்கலாம். தன் வாழ்நாளில் எத்தனை இழப்புகளைச் சந்தித்திருந்தாலும், கடைசிவரை அவள் கவலைப்பட்டது தன்னைப் பற்றியல்ல; என்னைப் பற்றித்தான். தன் துயரத்தைச் சொல்லிக்கொள்ளாமல், என் துயரத்தைப் பற்றிக் கவலைப்பட்டாள். இதைவிட ஒரு தாயின் அன்பை எப்படிச் சொல்லிவிட முடியும்?
காலம்: 2024 அக்டோபர்.
அவள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகத்திலிருந்து விலகிக்கொண்டிருந்தாள். உடல் மிகவும் மெலிந்து, தளர்ந்து போயிருந்தது. சாப்பிட்டு வெகுநாட்கள் ஆகியிருந்தன. கண்களைத் திறப்பதே இல்லை. ஆனால், நினைவை மட்டும் இழக்கவில்லை. அவளுக்குள் என்னென்ன நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன என்பது எனக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகளாகத் தன் மனத்தில் வைத்திருந்தவற்றை, யாரிடமும் சொல்லாமல் சுமந்துகொண்டே போய்விடுவாளோ என்ற எண்ணம் என்னை வாட்டியது.
உயிர் பிரிவதற்கு முந்தைய இரவு. நேரம் சுமார் பத்து மணி இருக்கும். நான்கு ஸ்பூன் பால் கொடுக்கப் போராடிக்கொண்டிருந்தேன். அவள் சாப்பிடவில்லை. மிகுந்த சிரமத்துக்குப் பிறகு, சரி என்று விட்டுவிட்டேன். அப்போது அவளுடைய கை மெதுவாக உயர்ந்தது. எதையோ தேடுவதுபோல்… யாரையோ அழைப்பதுபோல்… அந்தக் கை ஜெயந்தி இருக்கும் திசையை நோக்கிச் சென்றது.
என் மனம் ஒரு கணம் உறைந்து போனது. “இதோ வந்துட்டேண்டியம்மா… உன் கிட்ட!” என்று தன் மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தாளோ? இத்தனை ஆண்டுகளாக மனதுக்குள் சுமந்திருந்த ஏக்கத்தை, அந்தக் கணத்தில் தன் ஜெயந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தாளோ? எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் கை உயர்ந்த காட்சி இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை.
இரவு இரண்டு மணி. மீண்டும் காலிங் பெல் ஒலித்தது. ஓடினேன். எப்போதும்போல அவளுக்கு ஏதாவது வேண்டுமோ என்று நினைத்தேன். ஆனால், இம்முறை அவளால் பேசக்கூட முடியவில்லை. மெதுவாகக் கையை உயர்த்தி, என்னை அருகில் வருமாறு சைகை செய்தாள். பக்கத்தில் உட்கார்ந்து அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டேன். அந்தக் கையை லேசாக விடுவித்துக்கொண்டு, மீண்டும் என்னை அருகில் வருமாறு சைகை செய்தாள். ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பது புரிந்தது.
என் காதை அவளுடைய வாய்க்கு மிக அருகில் கொண்டுசென்றேன். ஒரு நிமிடத்திற்கும் மேலாகிவிட்டது. அவளிடமிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. நான் காத்திருந்தேன். அப்போது கவனித்தேன். அவளுடைய பார்வையற்ற கண்களின் ஓரங்களில் ஈரம். சில கண்ணீர்த் துளிகள் தலையணையை நனைத்திருந்தன. அந்த உப்பந்துளிகள், புற வலியினாலா? இல்லை, அக வலியினாலா? பதில், ஒரு வேளை தலையணைக்குத் தெரிந்திருக்குமோ?
என்ன சொல்லப் போகிறாள்? ஏதாவது வலி இருக்கிறதா? ஏதாவது வேண்டுமா? இத்தனை ஆண்டுகளாகச் சொல்லாமல் வைத்திருந்த ஏதோ ஒரு விஷயத்தை இப்போது சொல்லிவிட நினைக்கிறாளா? என் காதை அவளுடைய உதடுகளுக்கு அருகிலேயே வைத்திருந்தேன்.
மிக மெலிந்த குரல். காற்றில் கலந்துவிடக்கூடிய அளவுக்கு மெல்லிய குரல்.
“எனக்கு நீதான்டா கடவுள்!”
அவ்வளவுதான்.
அந்த வார்த்தைகளைச் சொன்னவள், என் கையை எடுத்துத் தன் உதடுகளால் அதில் மெதுவாக ஒரு முத்தம் பதித்தாள்.
என் கை. என் தாய். அவளுடைய கடைசி முத்தம்.
அந்த நிமிடத்தில் என்ன சொல்ல முடியும்? தன் மகளை இழந்த துயரத்தைத் திருப்பிக் கொடுக்க முடியுமா? கணவனை இழந்த வெறுமையை நிரப்ப முடியுமா? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்க்க முடியாத உலகத்தை அவளுக்குத் திருப்பித் தர முடியுமா? அவளுடைய உடல் அனுபவித்த இயலாமையையும், மனம் சுமந்த தனிமையையும் ஒரே கணத்தில் போக்கிவிட முடியுமா?
முடியாது.
அவள் என்னைத் தன் கடவுள் என்றாள். ஆனால், அவள் வாழ்நாள் முழுவதும் தேடிய ஆறுதலை என்னால் கொடுத்துவிட முடியவில்லை. அவளுடைய கடைசி ஆண்டுகளில் அவளுக்குத் துணையாக இருக்க முடிந்தது. ஆனால், அவள் இழந்த எல்லாவற்றையும் திருப்பித் தர முடியவில்லை.
அடுத்த பத்து மணி நேரத்தில், அவள் தன் ஜெயந்தியைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டிருந்தாள்.
அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன் மடியிலிருந்து பிரிந்துபோன அந்த ஒன்றரை வயதுக் குழந்தையைப் பார்க்க. இத்தனை ஆண்டுகளாகத் தன் நெஞ்சுக்குள் சுமந்திருந்த ஏக்கத்தை முடித்துக்கொள்ள. தன் குழந்தையை மீண்டும் அணைத்துக்கொள்ள.
இந்த முறை அவளை யாரும் பிரிக்க முடியாது.
என் கையில் அவளுடைய கடைசி முத்தத்தின் நினைவையும், என் காதுகளில் அவளுடைய கடைசி வார்த்தைகளையும் விட்டுவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
“எனக்கு நீதான்டா கடவுள்!”
அம்மா… உன் வாழ்நாள் முழுவதும் நீ கடவுளைத் தேடினாய். உன் துயரங்களை அவரிடம் மட்டுமே சொல்லிக்கொண்டாய். உலகத்திடம் எதையும் கேட்காமல், உன் வலிகளைக்கூட மௌனமாகச் சுமந்துகொண்டாய். கடைசியில், உனக்குக் கடவுளாக இருந்தது நான் என்றாய்.
ஆனால், அம்மா…
இங்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என் கடவுளைத் தவறவிட்டு, இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
No comments:
Post a Comment