நாட்டிற்கு இன்றோடு
அறுபத்து நான்கு வயதாம்.
ஒரு வேளை
ஆயக் கலை
அறுபத்து நான்கும்
அத்துப்படி
ஆகிவிட்டதோ?
சகுன சாஸ்திரமோ
சகுனி சாஸ்திரமாய்ச்
சரிந்துள்ளது.
யோக சாஸ்திரமோ
போக சாஸ்திரமாய்ப்
போய் விட்டது.
கணிதமோ
கறுப்புப் பணத்தை
எண்ணத்தான்
பயன் படுகிறது.
ரதப் பரீட்சையோ
ரத யாத்திரை உருவில்
வலம்
வருகிறது.
சங்ககிராம இலக்கணம்
சன் டிவி செந்தமிழாய்ச்
சஞ்சாரிக்கிறது.
மல்யுத்தம்
மக்களவையில்
மங்களகரமாய்
மிளிர்கிறது.
மதன சாஸ்திரமோ
மடங்கள் சிலவற்றில்
மஞ்சம் விரித்துள்ளது.
நீதி சாஸ்திரமோ
வாய்தாக்களின் பின்
ஒளிந்துள்ளது.
வியாகரணமோ
மொழிசிதைவில்
குட்டிக்கரணம் போடுகின்றது.
வேதம்-
பழையன
பல
மறந்தாகி விட்டது.
சோதிட சாஸ்திரமோ
தலைவனின்
தலைஏழுத்தைச்
சோதிக்கிற
சாஸ்திரமாகி உள்ளது.
அப்பப்பா!!
அறுபத்தி நான்கையும்
அடுக்குவதற்க்குள்
அகமே
அடங்கி விடுமோ?
ஆம்- அறுபத்தி நான்கு
ஆண்டுகளின்
அற்புதமோ
அரற்றி
ஆறாது.
வாழ்க நம் நாடு.
வருக இன்னும்
அறுபத்தி நான்கு!
No comments:
Post a Comment