Sunday, May 29, 2016

அசதியாடல்

தமிழர் பல பாரம்பரிய விளையாட்டுக்களில் ஈடுபட்டதாக பல சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதில் "அசதியாடல்" என்றொரு விளையாட்டு  உண்டு. வாயால் ஒருவருக்கொருவர் கேலி பேசி, பாடி களிப்பதற்க்கு அசதியாடல் எனப் பெயர். இந்த அசதியாடல் பல கவிகளால் இறைவனை கிண்டலும் கேலியும் செய்ய உதவியுள்ளது. எவ்வாறெனப் பார்ப்போம்.

இராமன் காட்டுக்குக் கிளம்பும் காட்சியை, கவிச்சக்கிரவர்த்தி கம்பன் இவ்வாறு நெஞ்சுருகப் பாடியுள்ளான்:

"கிள்ளையோடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல!
வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த
மாற்றத்தால்"

இதன் பொருள் என்னவென்றால், ராமன் காட்டுக்குச் செல்கிறான் என்றவுடன் கிளிகள் அழுதன; பூனைகள் அழுதன; பசுக்கள் அழுதன; அதன் கன்றுகளும் அழுதன; அன்று மலர்ந்த மலர்கள் அழுதன; இப்படி எல்லா உயிரினங்களுமே அழுதன என்று சொல்லும் கம்பன், மிக உருக்கமான முறையில் "அதுமட்டுமா, தாயின் கருவறையில் உருப்பெறாமல் இருக்கும் பிள்ளையும் சேர்ந்து அழுதது" எனக் கூறுகிறான்.

இந்த உருக்கமான காட்சியை இளங்கோவடிகள் அசதியாடல் முறையில் "ஆச்சியர் குரவை" பாட்டின் மூலம் எவ்வாறு இராமனை கேலி செய்யும் சாக்கில் வாமன அவதாரத்திற்க்கும் இராமாவதாரத்திற்க்கும் முடிச்சுப் போடுகிறார் எனப் பார்ப்போம்.

"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து"

இப்பாட்டின் பொருள் பின்வறுமாறு:

"இராமா! காலில் கல்லும் முள்ளும் குத்தக் கானகம் செல்கிராயா? நன்றாக வேண்டும் உனக்கு! மஹாபலிச் சக்கரவர்த்தி மூன்றடி நிலம் எடுத்துக்கொள்ளச் சொன்னபோது நீ ஒழுங்காக தரணியில் உன் பிஞ்சுப் பாதங்களால் மூன்று அடி நிலம் அல்லவா எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, முறைகேடாக அவன் தலையில் கால் வைத்து விளையாடினாய் அல்லவா? இப்போது நன்றாக அனுபவி!"

பார்த்தீர்களா? ஒரே காட்சியை வெவ்வேறு கோணங்களில் கவிநயங்கள் எவ்வாறு காண்கின்றனவென்று?

ஆமாம்? "தமிழில் இராமாயணம் கம்பனல்லவா பாடியுள்ளான்! இதில் இளங்கோவடிகளுக்கு இடமெங்கே?" எனக் கேட்கின்றீர்களா?

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இராமயணம் முதலில் தமிழில் அறிமுகம் ஆனது கம்பனால் அல்ல. சங்க கால இலக்கியங்களில் பல இடங்களில் இராமாயண குறிப்புகள் உள்ளதாக தமிழறிர்கள் பலர் கூறுகின்றனர். மேற்கொண்டு, கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவி பாடுவதற்க்கு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே இளங்கொவடிகள் சிலப்பதிகாரத்தில் மேற்க்கூறியுள்ள செய்யுள்மூலம் இராம காதைக்கான ஆதாரத்தை நமக்குக் கொடுத்துள்ளார்!!

இதே போன்று, சுந்தரமூர்த்தி நாயனார் பெரிய புராணத்தில் " இறைவா! எனக்குக் நீ எல்லாச்செல்வமும் அருள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் உமையவளிடம் சென்று " பார்த்தாயா, உன் கணவன் கங்கையைத் தலையில் வைத்துகொண்டல்லவா ஆடுக்றான்? என்னவென்று விசாரி!" என்று கோள்மூட்டுவேன்" எனப் பாடுகின்றார்!!

சமீப காலத்தில், இராமனின் கடைக்கண் பார்வை பெற வேண்டி தியாகராஜஸ்வாமிகள் அசதியாடலைக் கையாண்டுள்ளார்.

அது தவிரவும், மஹாகவி மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தன் பாட்டு ஒன்றில் அசதியாடலைக் கையாண்டுள்ளார்.  சமீபத்தில் இணைய தளமொன்றில் படித்து ரசித்தேன்.

செய்யுள் இதுதான்.

"அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை
யணியுருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச்
சடைமுடி வைத்தன னதனாற்
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்
பித்தென் றொருபெயர் பெற்றான்
களமர் கழனி சூழ்திரு வானைக்
காவகி லாண்டநா யகியே!''

இதன் பொருள் "அன்னையே! நீ எத்தகைய குணம் உடையவள்? கங்கை எத்தகைய குணம் உடையவள்? நீரிலே யாரேனும் மூழ்கினால் மூன்று முறை மட்டுமே அது (கங்கை) பிழை பொறுக்கும்; அவர்களை மேலே எடுத்துக் கொடுக்கும். "நீரும் முப்பிழை பொறுக்கும்' என்பது பழமொழி!. உழவர்கள் நிறைந்திருக்கின்ற வயல் சூழ்ந்த திருவானைக்காவில் வீற்றிருக்கின்ற அகிலாண்ட நாயகியே! நீயோ அளவற்ற பிழைகளைப் பொறுத்துக் காத்து அருள் புரிகின்றாய். மூன்றே பிழை பொறுக்கும் கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் ஈசன் அளவற்ற பிழைகளைப் பொறுத்து அடியார்களுக்கு அருள்புரியும் உனக்கு பாதியிடம் கொடுத்தது எந்த வகையில் நியாயம்? ஆகவேதான் உன் கணவனுக்குப் "பித்தன்' என்று பெயர் வந்ததோ?''

இவ்வாறு, அசதியாடலால் இறையை ஒரு தோழனாக்கி கிண்டலும் கேலியும் செய்து தங்கள் அன்பைப் பறை சாற்றினார்கள், நம் புலவர்கள்!

எனக்குத் தெரிந்த வரையில், உலகின் பல மதங்களிலும் இறைவனிடம் பயமும் பக்தியும் மட்டுமே காட்டுமாறு கூறுகின்றனர். இறைவனை கேலியும் கிண்டலும் செய்ய அனுமதி உண்டா? தெரியவில்லை! அனால் நாம், இறைவனையும்  ஒரு தோழனாக்கி, தொட்டில் போட்டு, அவனுடன் களித்து, அசதியாடலும் ஆடியுள்ளோம்!!!


2 comments:

Unknown said...

Beautiful. Loved the comparison of Ganga Mata and Parvati Devi and their respective statuses with Lord Siva. What imagination!

Unknown said...

Beautiful. Loved the comparison of Ganga Mata and Parvati Devi and their respective statuses with Lord Siva. What imagination!

Thank you.

Anantha Nageswaran

Shankara Jayanthi

  On this special day, praising with glee, Of Shankara, whose life was a divine decree. Caught by a crocodile in river's might, He embra...