Saturday, October 5, 2024

இருந்ததுமில்லை இல்லாததுமில்லை

 இருந்ததுமில்லை இல்லாததுமில்லை

இருளுமில்லை எங்கும் வெளியுமில்லை

பொருந்திய காற்றும் போகுமிடமுமின்றி

புவியுமில்லை புகலிடமும் யாதுமின்றே


மரணமுமில்லை மாறா அமுதமுமில்லை

மாலையுமில்லை மலரும் பகலுமில்லை

இரவும் பகலும் எண்ணற்ற காலமாய்

இயங்கா நிலையில் ஏகமாய் நின்றதே


ஆதியில் இருளே அனைத்தையும் மூட

அறிவற்ற நீரில் அனைத்தும் மூழ்கியதே

சோதியற்று சூனியமாய் சுருங்கிய அவ்வுலகம்

சுடரொளி வெப்பத்தால் சுயமாய்த் தோன்றியதே


காமம் முதலாய் கருத்தினில் தோன்றி

கனவாய் உருவாய் கண்ணில் தெரிந்ததே

ஞானிகள் உணர்ந்தார் நடுவில் ஓர் கயிறு

நல்லதும் தீயதும் நாடோறும் பிணைப்பதை


மேலதோ கீழதோ மேதினி எங்கணும்

மேவிய சக்தி மிகுந்து பரவியதே

ஆக்கல் காத்தல் அழித்தல் மூன்றும்

அருவமாய் உருவமாய் அமைந்து நின்றதே


எங்கிருந்து வந்தது இவ்வுலகப் படைப்பு?

எவரால் உண்டானது இயற்கையின் அமைப்பு?

தெய்வங்கள் கூட தெரிந்திலர் இரகசியம்

தெளிவாய் உரைப்பார் தெரிந்தவர் யாருளர்?


உலகின் தோற்றம் உண்மையில் எப்படி?

உயர்ந்தோன் படைத்தானோ உதாசீனமாய் நின்றானோ?

அலகில் வானில் அமர்ந்திருப்பவனே

அறிவான், ஒருவேளை அவனும் அறியானோ?

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...