Friday, October 18, 2024

ஈசன் அருளினால்!

 

கங்கையும் யமுனையும் காவிரி நதிகளும்

பொங்கிடும் சரஸ்வதி பூமியில் ஓடிடும்!

மங்காத புண்ணியம் மாநதி தந்திடும்!

எங்கும் நிறைந்திடும் ஈசன் அருளினால்!


ஆண்டவன் படைத்தனன் ஆதியில் எல்லாம்!

வேண்டிய பொருள்களை விண்ணிலும் மண்ணிலும்!

தூண்டிடும் ஒளியினைச் சூரியன் சந்திரன்

ஈண்டிய அறிவினை எல்லோர்க்கும் தந்தனன்!

உண்மையும் நேர்மையும் ஊற்றெடுத்து ஓங்கிட

வண்மையாய்த் தவத்தினால் வந்தன காலங்கள்!

கண்ணுக்குத் தெரியாக் கடலினில் தோன்றிய

எண்ணற்ற உயிர்களை ஏற்றம் பெறச் செய்தான்!


மண்ணிலே புழுதியும் வானிலே மேகமும்

கண்ணுக்குத் தெரியாக் கருணை வடிவமும்

எண்ணற்ற உயிர்களை ஈடேற்றும் தெய்வமும்

நண்ணிட வேண்டுமே நாளும் நமக்கருள்!


பொன்முடி வருணனே! பொங்கும் அருள் தாருமே!

மன்னிய தீர்த்தமும் மாசற வேண்டுமே!

என்னுடல் பாவங்கள் எல்லாம் அகற்றிடு!

நன்னெறி காட்டிடு நாளும் எனக்கருள்!


சிந்தையால் சொல்லினால் செய்கையால் செய்ததைத்

தந்திடு மன்னிப்பைத் தாரணி காக்குமோர்!

இந்திரன் வருணனும் ஈசனும் சூரியன்

வந்திடும் தூய்மையை வாழ்வில் அளிக்குமே!


அக்கினி அப்புவே! ஆற்றல் மிகுந்தவா!

மிக்க வணக்கங்கள் மேதகு தேவர்க்கே!

தக்க நீர் தன்மையைத் தாங்கிய வாழ்விலே

புக்கிடும் தீமைகள் போக்கிட வேண்டுமே!


கொடுமையும் கேடுகள் கூடிய செயல்களும்

அடியொடு நீங்கிட ஆற்றல் தருவாயே!

படியிலே நல்லவன் பாவம் அகன்றவன்

முடிவிலே வானவர் முற்றும் அடைந்திட!



தூய்மையின் வடிவமாய்த் தோன்றிடும் ஒளியினை

நேயமாய் அணைத்திடும் நெஞ்சினை நான் பெற!

தாயவள் அன்பினைத் தந்திடும் பிரம்மமே!

ஆயிரம் கோடியாய் ஆனந்தம் தந்திடு!


தீமைகள் அகன்றிடத் தேவர்கள் காக்கவே!

பூமியில் நல்லவர் புகழ்பெற வாழ்கவே!

நாமெலாம் ஒன்றென நாடிடும் உணர்வினால்

ஓமென ஓங்கிடும் உயர்வினை அடைந்திட!

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...