Monday, November 17, 2025

கண்ணா, நீ வருவாயா?

 நினைத்தேன்…

இரவு முழுக்க மழை பெய்தது என்று.

ஜன்னல் திறந்த போது தான் புரிந்தது –

வெளியில் இல்லை,

என் உள்ளேதான் பொழிந்திருக்கிறது -

உன் நினைவு.


எத்தனை நாள் ஆயிற்று,

உன் பெயரை வாயால் சொல்லி ?

ஆனால் 

மூச்சு வரும் ஒவ்வொரு தடவையும்

சத்தமில்லாமல் 

உன் பெயரையே

உச்சரிக்கிறது.


காலைக்  காற்று வந்து

கூந்தலில் விளையாடும் போது,

திடீரென்று

உன் விரல்கள் நினைவு வருகிறது…

ஒரு நொடி கூட

அதை அனுபவிக்க, மகிழ முடியவில்லை;

அடுத்த நொடியே

அது காயமாகி விடுகிறது.


என் இளமையே,

இன்னும் உன்னை

அவன் வருவான்னு 

ஏமாற்றிக் கொண்டே 

இருக்கிறாயே –

என்ன ஒரு பொறுமை,

என்ன ஒரு பாவம்.


வசந்தம் வந்தாலும்

வண்ண மலர்கள் பூத்தாலும்

என் இரத்தத்துக்குள்ளே

இனி வருங்காலம் எல்லாம் 

காதல்நெருப்பு தான்.

அது எரியும் சத்தம் கூட கேட்கிறது



“அவன் வருவான்…” என்று 

ஒரு குயில் கூட கூவுகிறது - பின் 

இதயம் ஏமாந்து விடுகிறது.


வாசலில் காலடி சத்தம் கேட்டால்,

அவன் என்ற நம்பிக்கையில் 

இதயம் ஓடி சென்று

வாசலுக்கு அடிபட்டு

திரும்பி வந்து அழுகிறது.


இன்று நான்

யாரிடமாவது சிரித்தால்,

அந்த சிரிப்புக்குக் கீழே

நான் மட்டும் கேட்கும் குரலில்

நீங்காத ஒரு ஓலம் –


“உன்னைத் தவிர

வேறொருவரால்

இந்த உயிரைத் தழுவ முடியுமா?”


உன்னைக் இழந்த அந்த நொடியில்

காதல் மட்டும் போகவில்லை;

அதோடு சேர்ந்து

என் எதிர்காலமும்,

என் அமைதியும்,

என் ஆழ்ந்த உறக்கமும்

ஒன்றாகச் சென்று விட்டது.


ஒவ்வொரு இரவும்

ஒரே ஒரு வரியே மனதுக்குள்:


“உன் நினைவு இல்லாத

ஒரு மூச்சும்

எனக்கில்லை…”


இப்போதெல்லாம் 

இது தான் 

என் ஜபம்,

என் தண்டனை,

என் காதல்.



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...