Wednesday, November 26, 2025

காதின் குமுறல்

நானும் இன்னொரு காதும்—

நரனின்  இரண்டு உயிர். 


இடுக்கணின் இரட்டையர்கள்.


ஆனாலும்…

ஒரு நாளும் ஒருவரை ஒருவர்

நேரில் பார்த்ததில்லை.


எந்த சாபம் சுழன்றதோ—

எதிரெதிர் திசையில் எங்களை

எறிந்து வைத்த பிரபஞ்சம்,

எங்களைப்  பார்த்து

ஏளனம் செய்ததோ? 


நாங்கள்  பேச மாட்டோம்…

ஆனால் உலகின் எல்லாப் பேச்சையும்

நாங்கள்  தான் கேட்போம்!


கொலைவெறிக்  கோபமும்,

கோவிலுள் பாசுரமும் 

காதலின் கீதமும்

காதலியின் கிசுகிசுப்பும் —

எல்லாம் எங்களின் ஊடேதான்.


கண்ணாடியின் கட்டையும்

காதொலிப்பான் கருவறையும் 

கண்ணீரின் நினைவும் - எல்லாமே 

எங்கள் தோளில் தான் தாங்கும்.



கொடுமை என்னவென்றால்,

கண்கள் பார்த்துச் செய்த தவறு - 

காதுகளுக்கு  தண்டனை!


குழந்தைப் பருவத்தில்

மாஸ்டர் கோபித்தால்

மடக்கப்படும் மெல் சதை நாம்;

அடக்கமாக இருந்தாலும்

அடிபடுவது நாமே.


பின்னர் வயது வந்ததும்—

அலங்காரத்தின் வேட்டை ஆரம்பம்.


உலோகமும், உருகிய காதலும்

இடமும் தேடி எங்களைத் துளைத்து,

இரண்டு துளிகள் வலியையும்

இனிதே அளித்தது  உலகம்!


எங்களுக்கென்று

கருமை "காஜல்"லும் இல்லை,

அழகு க்ரீமும் இல்லை;

மரத்த துளையின் வழியே 

மரம் போல மாட்டப்படுவது

காதணியோ, கடுக்கண்ணோ.


அரசியல்வாதியின் அங்கலாப்புகள்  - இல்லத் 

தரசியின் கிசுகிசுப்புக்கள்.

சுடு சொற்கள்,  சூளுரைகள்

கடுமைகள் , கதறல்கள் 


புசித்துப் புசித்து 

புளித்து விட்டது மானுடா !


எங்கள் குமுறலை 

எங்குதான் கொட்டுவோம்?


கண்ணிடம் சொன்னால்

கண்ணீர் சிந்தி பின் 

கழன்று கொள்ளும் 


மூக்கிடம் சொன்னால்

மூக்கு நுணியில் கோவம்!


வாயிடம் சொன்னால்

வாய்மொழி விளையாட்டு.

 

எங்கள் குறை 

தங்கி விட்ட்து எங்களிடமே!   


அனைவரின் சுமையையும்

நாம் தான் சுமப்போம்—

ஓதுவாரின் தேவாரம் முதல் 

ஒப்பாரியின் ஓலம் வரை.

மொய்வண்டு ரீங்காரம் முதல் 

மொபைலின் ரிங்டோன் வரை.


 மௌனத்தின் இசை நாம்.

வடிவில் சிறியது தான்- ஆனால் 

உலகின் சப்தம் எல்லாம்

உய்விக்கிறது எங்கள் வழியே தான்.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...