இளையராஜா இசையமைத்த "சங்கத்தில் பாடாத கவிதை" என்ற பாடலை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது
த ரரரரரரர த ரரரரரரர
இந்த நவீன கால பாடல் சந்தம் என்ற தமிழ் கவிதை வடிவத்தையும் இசையமைப்பையும் அழகாக விளக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தப் பாடலில் 'சங்கத்தில்', 'அங்கத்தில்', 'சந்தத்தில்' என்று மீண்டும் மீண்டும் வரும் ஒலிப்பொருத்தங்களும், தாளக்கட்டுகளும் நவீன தமிழ் திரையிசையில் சந்தத்தின் மகத்துவத்தை நிரூபிக்கின்றன.
"சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி..." இது மற்றுமொறு புகழ் பெற்ற பாடல், சந்தம் பாணியில்.
இந்த நவீன கால உதாரணங்களிலிருந்து காலத்தை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிப்போம். பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் சந்தக்கவிதையின் உச்சகட்டத்தை அடைந்தவர். தமிழிலக்கியத்தில் சந்தக்கவிதை என்பது இசைக்கும் கவிதைக்கும் இடையிலான அற்புதமான பாலமாகும். சந்தத்தின் சிறப்பு என்னவெனில், ஒவ்வொரு சொல்லும் குறிப்பிட்ட இசைநயத்துடன் பின்னிப்பிணைக்கப்பட்டு, கேட்பவரின் உள்ளத்தில் அலைகளை எழுப்பும் கலைவடிவமாகும்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள் சந்த இலக்கியத்தின் கொடிகட்டிப் பறக்கும் சான்றுகளாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்த அமைப்புகளைக் கொண்டவை. ஒரே சந்தத்தை இரண்டு பாடல்களில் மீண்டும் பயன்படுத்தவில்லை என்பது அவரது மேதைமையின் சான்றாகும். திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம் போன்ற படைப்புகளையும் ஆர்வமுள்ளோர் ஆராயலாம். சந்த இலக்கியத்தில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றோர் முன்னோடிகள் என்றாலும், சந்தத்தின் சுதந்திரமும் இசையழகும் அருணகிரிநாதரிடம்தான் முழுமையாக மலர்ந்தது.
சந்தம் என்றால் இசை, ஓசை, ஒலிப்பொருத்தம் என்பதாகும். தமிழின் தொன்மையான இசை மரபில் சந்தப்பாடல்கள் முக்கிய இடம் வகித்தன. பிற்காலத்தில் கர்நாடக சங்கீதம் தென்னிந்தியாவில் பெரும் வளர்ச்சியடைந்து தனக்கென புதிய வடிவங்களை உருவாக்கியது. இரண்டு இசைமரபுகளும் தமிழகத்தில் இணைந்து வளர்ந்தாலும், திருப்புகழ் போன்ற சந்தப்பாடல்கள் தமிழின் தனித்துவமான இசைமரபை இன்றும் முழுமையான இசையழகுடன் பாடப்படுகின்றன.
அருணகிரிநாதரின் சந்த அமைப்பில் பல தனித்துவங்கள் உள்ளன. ஒலிப்பதிவின் அடிப்படையில் சொற்களை அமைத்து இசைநயத்தை உருவாக்கியுள்ளார். 'தனதனத் தந்தந்த' போன்ற சொல்லமைப்புகள் குறிப்பிட்ட தாளக்கட்டுகளை உண்டாக்குபவை. சொற்களின் நீட்டலும் சுருக்கமும் மிகத் திறமையாக கையாளப்பட்டுள்ளன. மேலும் அவரது சொல்விளையாட்டு அசாதாரணமானது - இரட்டுறமொழிகள், உவமைகள் என பலவிதமான கவித்திறன்களை ஒரே பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் ஒன்றை எடுத்துக்கொண்டால்,
"முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்"
இதில் குறிப்பிட்ட எழுத்துகள் மீண்டும் மீண்டும் வருவதால் தாளச்சிறப்பு உண்டாகிறது. சொற்கள் பல பொருள்களில் வரும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 'முத்து' என்ற சொல் முக்தி என்ற ஆன்மீகப் பொருளிலும், வெண்முத்து போன்ற பற்கள் என்ற நேரடிப் பொருளிலும் வருகிறது. 'பத்தி' என்பது பக்தி. இவ்வாறு ஒவ்வொரு வரியிலும் சொல்லாட்சியின் பல பரிமாணங்களும், தாளத்தின் இசைப்பாங்கும் இணைந்து வருவதைக் காணலாம்.
அருணகிரிநாதரின் பாடல்களில் செந்தமிழின் இலக்கண விதிகளோடு, எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வழக்குச் சொற்களையும் இணைத்துள்ளார். இயற்கைக் காட்சிகள், உவமைகள் பாடலின் பொருளை ஆழப்படுத்துகின்றன. ஒவ்வொரு திருப்புகழையும் ஆராய்ந்தால், மறைந்திருக்கும் பல அர்த்தங்களையும் சொல்லாட்சி நுட்பங்களையும் கண்டுகொள்ளலாம்.
நவீன காலத்தில் திருப்புகழின் மகத்துவம் பலருக்கும் முழுமையாக தெரியவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழ் தமிழின் இசைவளத்தையும் கவித்திறனையும் ஒரே சேர வெளிப்படுத்தும் அரிய படைப்புகளாகும். ஒவ்வொரு பாடலும் தனி ராகமும் தாளமும் கொண்டது. அவரது சொல்லாட்சியும் பொருளாழமும் ஒப்பற்றவை.
நவீன தமிழ் பேசும் மக்கள் தங்கள் மொழியின் இந்த பொக்கிஷத்தை அறிய வேண்டும். திருப்புகழை வெறும் பக்தி பாடல்களாக மட்டும் பார்க்காமல், இலக்கியப் படைப்பாகவும் இசைக்கலையின் உச்சமாகவும் அணுக வேண்டும். தமிழின் சந்த இலக்கியத்தில் அருணகிரிநாதர் ஒப்பற்ற மன்னன்.
வாரியார் சுவாமிகள் கூறியது: "அருணகிரியார் என்றாலே கவிதையின் கடவுள். தமிழ்மொழியின் திறமையையும் இசையின் இனிமையையும் ஒன்று சேர்த்தால் அது திருப்புகழ். ஒவ்வொரு சொல்லிலும் இசை, ஒவ்வொரு எழுத்திலும் பக்தி, ஒவ்வொரு பாடலிலும் கவிதையின் உச்சம். தமிழ் மொழி இருக்கும் வரை திருப்புகழும் இருக்கும்; திருப்புகழ் பாடப்படும் வரை தமிழின் இசைவளமும் வாழும்."
No comments:
Post a Comment