மானைத் துரத்தி மதியைத் தொலைத்தார்
வானில் உலவும் வழியை மறந்தார்
தேனைத் தேடித் திசையெலாம் அலைந்து
ஊனைப் போக்கி உயிரையும் இழந்தார்.
பரதன் கண்ட பசுமான் பின்னே
பரமன் தந்த பணியை மறந்தான்
கருணை மிக்க கடமை விட்டே
கனவின் பின்னே களைத்து விழுந்தான்.
இராமன் கண்ட இலங்கு மானும்
இராவணன் வைத்த இடறல் தானும்
பிராணப் பிரியைப் பிரிய வைத்து
புராணக் கதையாய்ப் போனது கண்டோம்.
பரீட்சித் மன்னன் பார்த்த மானும்
பாவக் காலம் பரவக் காரணமாய்
துரித கதியில் துயரம் தந்து
துன்பக் கலியை தோற்று வித்தது.
துஷ்யந்தன் கண்ட தூய மானும்
சகுந்தலை கடுஞ் சாபம் தந்து
கற்பின் மிக்க காதல் மறந்து
கண்ணீர் வடிய, காலம் போனது.
அழகாய்த் தெரியும் ஆசை எல்லாம்
அழிவின் வாசல் ஆகும் என்றே
வழியில் தெரியும் வானவில் போலே
வாழ்வை வீணாய் வதைக்க வேண்டாம்.
பரதன் - ஜட பரதன் ( பாகவத மஹா புராணம்)
No comments:
Post a Comment