Thursday, June 25, 2026

கோவையில் ஒரு மதியம்

வெசக் காலம். காந்திபுரம் நாற்சந்தி, பகல் பன்னிரண்டு மணி, சூரியன் நேரா தலையிலேயே தீ மூட்டுகிறான். AUTOCAD கிளாசு முடிஞ்சு நிம்பு சர்பத்து குடிக்கணும்னு நான் நிக்கிறேன். சிவப்பு மாருதி ஸ்விஃப்ட்டும் கருப்பு டிவிஎஸ் ஸ்டார்ரும் ஒரே நேரத்துல நாற்சந்தியிலே நுழையுது — ஆட்டோ மறைவிலிருந்து பொசுக்குன்னு வந்ததால டிவிஎஸ் விசுக்குன்னு திரும்புது, ஹேண்டில்பார் ஸ்விஃப்ட்டோட கண்ணாடி பக்கம் ஒரு டிக்! அந்த ஒரு சத்தம்தான் காந்திபுரம் நாற்சந்தியோட அன்னிய மொதல் கருமாந்திரம்கெரகம்.

ஸ்விஃப்ட்டுல பழனிசாமி — புது கார், கர்வம் மொஞ்சிலேயே தெரியுது — வெருசா இறங்கி பாக்கிறான். ஸ்கிராட்ச் இல்லீங்கண்ணா, கண்ணேதெரியல. ஆனாலும் வாய் திறக்கிறான்: "டேய், என் புது கார்ல ஸ்கிராட்ச் ஆச்சே!" டிவிஎஸ்ல வேல்முருகன் அண்ணா — ஆர்.எஸ்.புரம் தண்ணீர் பிஸினஸ், அந்தப் பைக்கை குழந்தை மாதிரி வளர்த்தவரு — பதனமா இறங்கி: 

"ஏனுங்கோ கண்ணு, ஒண்ணுமில்லீங்கண்ணா!" 

"இருக்கு!" 

"சூரிய வெளிச்சம் ரிஃப்லெக்‌ஷன், கம்மனாட்டி மாரி பேசாத!"

அவ்ளோதான். "தெரியுமா நான் யாருன்னு?! சிங்காநல்லூர் எஸ்ஐ நஞ்சுண்டப்பா என் மாமன், ஒரே போன்ல உன் ஊட்டையே கட்டிருவாரு, செய்வாகளாகும்!" 

வேல்முருகன் அண்ணாவும் விடல: "என் மச்சான் ஆறுமுகம் கோவை ஆர்டிஓல இருக்காரு. உன் டாக்குமெண்ட் சரியா இருக்கட்டும், செய்வாகளாகும்!" — அந்த ஒரு வார்த்தையிலே பழனிசாமிக்கு கண்ணுல படபடப்பு தெரியுது.

நக்கன்பட்டி நாகப்பன் அண்ணா சந்துல சிந்து பாட நெனச்சு சைக்கிள் காரிரியர்ல இருந்த டீ CAN அ தட்டி,  "வாங்கோ கண்ணுங்களா, தேநீரு குடிங்கோ, நிழல்லே நின்னு பாக்கலாம்!" அஞ்சே நிமிஷத்துல நாற்சந்தியே தேநீர் கடையாயிடுது. ஒரு பீளமேடு லாரி டிரைவரு நிறுத்திட்டு 

"என்னாடா?" 

"ஸ்கிராட்ச் சண்டை!" 

"எங்க ஸ்கிராட்ச்?"

 "எங்கயும் இல்லீங்கண்ணா!" 

வழியில வந்த செல்லம்மாள் பாட்டி வாய் மூடல: 

"ஆமாமுங்கோ எஸ்ஐ மாமன்! ஏனுங்கோ, அப்பா யாரோட மாமன் ஐஜிஆ இருந்தா நாற்சந்தியே தனி ஊர் ஆயிடும்! ஸ்கிராட்சே இல்லாத இடத்துல அர மணி நேரம் அக்கப்போர் — அக்கியானமே இல்லீங்கண்ணா இந்த மாக்கானுங்களுக்கு!"

கடைசியா நுழைகிறாரு முருகேசன் அண்ணா — அம்மாயிகிட்ட கீரை வாங்கிட்டு வர்ரவரு. ரவுசு கேட்டு நின்னாரு, ஒரு நிமிஷம் பொழுதோட பாத்தாரு, மடார்ன்னு நடுவுல நுழைஞ்சாரு. 

"ஏனுங்கோ கண்ணு, போங்கோ — வெசனம் வேண்டாம், ஸோலியப் பாருங்கோ.அட போங்க கண்ணுங்களா அல்லாரும்!" 

வேல்முருகன் அண்ணா அலுங்காமே பைக் ஏறி கிளம்பினாரு. பழனிசாமிக்கும்: "நீயும் போ கண்ணு, ஊட்டுல உன் அம்மாயி காத்திருப்பாங்க." "அம்மாயி" சொல்லு வந்ததும் அமைதி ஆயிட்டான். வெருசா கார்ல ஏறி போயிட்டான். 

செல்லம்மாள் பாட்டி: "திருவாத்தான்!" 

நாகப்பன் அண்ணா: "போச்சாது பாட்டி, என் முப்பத்தஞ்சு தேநீரு போயிடுச்சு — நல்லாவே ஆச்சு!"

நான் நிம்பு சர்பத்து குடிச்சுட்டு கிளம்பினேன். 

ஒரு முருகேசன் அண்ணா "போங்கோ" சொல்லும்வரை நாமெல்லாம் ஒட்டுக்கா நின்னுட்டே இருப்போம் — இது கோவைதான் கண்ணுங்களா. இல்லீங்கண்ணாவும், ஆமாமுங்கோவும், தேநீரும் சேர்ந்து வாழுது இங்க. 

செய்வாகளாகும்!

No comments:

முருகன் காவடி சிந்து

 கந்தனே போற்றுவோம் கடவுளே முருகா கந்தமலர் சூடிடும் கருணையே கந்தா வல்லவனே விரைந்திங்கு வாரடா தேவா வல்லடி வணங்குவோம் வரமொன்று வேலா செந்தில் ஆண...